வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு நேர்முகப் பரீட்சைக்காக வந்த இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கோண்டாவிலை சேர்ந்த கணேசலிங்கம் கஜேந்திரன் (வயது 30) என்ற இளைஞன் மேற்படி அமைச்சில் சாரதி வேலைக்காக நேர்முகப் பரீட்சைக்கு வந்திருந்த சமயம் அமைச்சின் முன்னாலுள்ள மின்மாற்றியருகில் கைத் தொலைபேசி மூலம் உரையாடிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.
இவர் கைதானமை குறித்து பிரதி அமைச்சர் இராதா கிருஷ்ணனிடம் தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் , கடந்த மாதம் 21 ஆம் திகதி கைதான பிரஸ்தாப வாலிபர் யாழ்ப்பாண ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் தங்கராஜாவின் சிபார்சின் பேரில் அமைச்சுக்கு வந்ததாகவும் குறிப்பிட்ட நேரத்தில் அமைப்பாளர் அங்கு வராமையினால் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு எத்தனித்த போதே இவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இளைஞரின் கைது தொடர்பாக உறவினரான எஸ். பொன்னம்பலம் என்பவரும் பிரதி அமைச்சரிடம் நேரில் வருகை தந்து புகார் செய்ததையடுத்து பிரஸ்தாப இளைஞரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.