* தமிழக கரையோரப் பொலிஸாரின் ரோந்து அதிகரிப்பு; கருணாநிதி
இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் அகதிகளென்ற போர்வையில் போராளிகள் தமிழகத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாக முதலமைச்சர் மு.கருணாநிதி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
பொலிஸார், காவல் பிரிவினர், தீயணைக்கும்படைப் பிரிவினருக்கான மானியம் வழங்கும் சட்டமூலப் பிரேரணை மீது நேற்று தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுகையிலேயே கருணாநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெடிமருந்துகள், இரும்புக்குண்டுகள், மருந்துகள் மற்றும் பொருட்களை இலங்கைக்குக் கடத்த முயற்சிப்போருக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தியிருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்டதாக இந்த வருடத்தின் முதல் 3 மாதகாலப்பகுதியில் 15 இலங்கைத் தமிழர்கள் உட்பட 36 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டபின் 21 ஆயிரம் பேர் அகதிகளாகத் தமிழகத்திற்கு வந்துள்ளனர். 73,087 இலங்கைத் தமிழர்கள் மாநிலத்தின் 25 மாவட்டங்களில் 177 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.