* அமைச்சர் நிமால் பரிகாசம்
டிட்டோகுகன்
பாராளுமன்ற அமர்வுகள் ஜனாதிபதியால் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய நகைச்சுவையான விடயங்களை அரங்கேற்றி வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பரிகாசம் செய்தார்.
கொழும்பிலுள்ள மஹவலி கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சபை முதல்வரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
`பாராளுமன்ற அமர்வுகள் இடை நிறுத்தப்பட்டமை குறித்து ரணில் விக்கிரமசிங்க குழப்பமடைந்துள்ளார். இது அவரது புதிய நகைச்சுவையாகியுள்ளது. ரணில் விக்கிரம சிங்கவின் உறவினரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக் கொண்டே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சபை அமர்வுகளை இடை நிறுத்தி வைத்திருக்கின்றார். இதில் எந்த சட்ட விரோதமும் கிடையாது.
இருப்பினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்ய நாம் பல முறை முயன்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தான் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ரணிலுக்கு அந்தப் பதவிக்கு வரவும் வேண்டும் அதை தூற்றவும் வேண்டும். இதற்கு முன்னரும் பாராளுமன்ற அமர்வுகள் இடை நிறுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எனவே, இதில் ரணில் விக்கிரமசிங்க குழம்புவதற்கு புதிய விடயங்கள் எதுவுமில்லை.
இவ் விடயத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பில் தனக்கும் அதிகாரத்தையே பயன்படுத்தியுள்ளார். அது ஜனாதிபதிக்குரிய உரிமை.
பாராளுமன்ற அமர்வுகள் இடை நிறுத்தப்படும் முன்னர் தனக்கு கூறவில்லையென ரணில் கூறுகிறார். ஆனால், ஜனாதிபதி சபை அமர்வுகளை இடை நிறுத்த முன்னர் சபாநாயகரிடமோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரிடமோ அனுமதி பெற வேண்டுமென அரசியலமைப்பில் எங்கும் கூறப்படவில்லை என்றார்.