* வெள்ளவத்தைப் பகுதியில் சம்பவங்கள் அதிகரிப்பு
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கார்களில் வந்து பெண்களின் தங்கச் சங்கிலியை அறுத்துச் செல்வோர் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை வெள்ளவத்தை பசல்ஸ் ஒழுங்கையில் வந்து கொண்டிருந்த பெண் ஒருவரின், பெறுமதிமிக்க தங்கச் சங்கிலி காரொன்றில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஆடம்பரமான காரில் வந்த ஒருவர், கார் சற்றுத் தூரம் சென்று நிற்க அப்பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடிச் சென்று காரில் ஏறி மறைந்துவிட்டார்.
சங்கிலியை பறிகொடுத்த பெண் பின்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
ஏற்கனவே, இதுபோன்ற பல முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகக் கூறிய பொலிஸார், காரின் இலக்கத் தகட்டு எண் தெரிந்தால் அதனைத் தேடிப்பிடிக்க முடியுமெனக் கூறியுள்ளனர்.
அத்துடன், இவ்வாறொரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆடம்பரக் காரொன்றை தாங்கள் பிடித்துள்ளதாகக் கூறி அந்தக் காரைக் காண்பித்த பொலிஸார், அதுவொரு டாக்டரின் காரெனவும் அதனை `கெப் சேவை' (வாடகைக்கார்) நடத்துவோரிடம் அவர் ஒப்படைத்த போது, இவ்வாறான கொள்ளையொன்றில் ஈடுபட்டு அதன் இலக்கத்தகட்டு எண்ணைக் கண்டுபிடித்து காரைத் தாங்கள் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், வெள்ளவத்தை, தெகிவளை பகுதியில் ஆடம்பரக் கார்களில் `ரிப்-ரொப்' உடையணிந்து தனியார் தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வருவோர் மிகத் தந்திரமாக அங்கிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.