* மக்கள் மத்தியில் அச்சம்
மன்னார் நானாட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டோரின் விபரங்களை படையினர் சேகரித்து வருவதால் அப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருந்த காலத்தில் இப் பகுதியைச் சேர்தவர்கள் விடுதலைப் புலிகளின் மக்கள் படையில் பயிற்சி பெற்றதாகக் கூறியே அவர்களின் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் தற்போது படையினர் ஈடபட்டுள்ளனர்.
இது தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பல கிராமங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டே மக்கள் படைமுகாம்களுக்கு அழைக்கப்பட்டு விபரங்கள் திரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொக்குப் படையானைச் சேர்ந்தவர்கள், இலந்தைமோட்டை பகுதியிலுள்ள 21-5 படையணித் தலைமையகத்திற்கு வரவழைக்கப்ட்டு விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
நேற்று நீலமடு மற்றும் பொற்கேணி கிராம மக்கள் இந்தப் படைமுகாமுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
ஏற்கனவே படையினர் இவ்வாறனதொரு நடவடிக்கையில் ஈடுபட்டபோது அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து அந்த நடவடிக்கையை கைவிட்டபடையினர் தற்போது மீண்டும் இந்த விபரச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.