எரிபொருள் விற்பனை நிலையத்தில் இருந்து விற்பனைப் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிய முன்னாள் விமானப்படை வீரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமான சம்பவம் வியாழக்கிழமை மாத்தறை - கக்கனந்துறையில் இடம்பெற்றுள்ளது.
இவரிடம் வேறு ஒருவரும் சேர்ந்து ஆயுத முனையில் இக்கொள்ளையை நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார்கள்.
இதுதொடர்பாக மாத்தறை பொலிஸாரும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கொள்ளையர்களைப் பின்தொடர்ந்து பொலிஸ் கோஷ்டி ஒன்று சென்றது.
பொலிஸாரைக் கண்ட இருவரும் ஆட்கள் நடமாட்டமில்லாத பற்றைக் காட்டுப் பகுதிக்குள் தப்பிக்க முயன்றனர். அப்போது பொலிஸார் அவர்களை நிற்குமாறு சமிக்ஞை செய்தனர். ஆனால், இருவரும் அதைப் பொருட்படுத்தாமல் சென்றனர்.
இதனையடுத்து பொலிஸார் அவ்விருவரையும் நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அதில் விமானப் படை முன்னாள் வீரர் அந்த இடத்தில் காயமடைந்து விழுந்தார் மற்றவர் தப்பியோடிவிட்டார்.
காயமடைந்தவரை பொலிஸார் மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதித்த சில மணிநேரத்தில் அவர் மரணமானார்.
பொலிஸார் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி என்பவற்றையும், ஒரு தொகைப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
விமானப்படையில் இருந்து தப்பிவந்த வலிமுனிகே பிலியந்த (31 வயது) என்பவரே இச்சம்பவத்தில் மரணமானவராவார்.