* ஹக்கீம் முறைப்பாடு
புத்தளம் மாவட்டத்திலுள்ள அகதி முகாம்களில் வசிப்பவர்களை திருகோணமலைக்கு அழைத்து வந்து அவர்களை கிளிவெட்டி, திரியாய் போன்ற பிரதேசங்களில் முறைகேடாக வாக்களிப்பில் ஈடுபடுத்த அமைச்சர் ஒருவர் முயற்சித்து வருவதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தேர்தல் ஆணையாளருக்கு முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலைத் தேர்தல் தொகுதியிலுள்ள கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் ஒன்பது வாக்குச்சாவடிகளும் திரியாய் மகா வித்தியாலயத்தில் நான்கு வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருப்பதோடு, அங்கு முறையே 9000, 3000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் அநேகர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டதால், அவர்களது வாக்குகள் இவ்வாறு புத்தளம் போன்ற தூரப்பிரதேசங்களிலிருந்து பஸ் வண்டிகளில் அழைத்து வரப்படுவோரால் முறைகேடாக அளிக்கப்படுமென அஞ்சப்படுவதாகவும் ரவூப் ஹக்கீம் தேர்தல் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி அமைச்சரின் கீழுள்ள அமைச்சில் கடமையாற்றும் அதிகாரிகள் இந்த வாக்குச்சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் பாரிய அளவில் வாக்குத் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் சாத்தியம் இருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபர், தேர்தல்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கும் ஹக்கீம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.