*உலக உணவுத் திட்டம் வேண்டுகோள்
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடி தோன்றியுள்ள நிலையில், இலங்கையில் மோதலினால் இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்க 36 மில்லியன் டொலர்களை வழங்குமாறு ஐ.நா. முகவரமைப்பான உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இலங்கையில் தற்போது 10 இலட்சம் பேருக்கு உலக உணவுத் திட்டம் உதவி வருகிறது. இவர்களில் 4 இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருப்பவர்களாவர்.
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமையில் இலங்கையில் உலக உணவுத் திட்டம் தனது பணியை
தக்கவைத்துக் கொள்வதற்கு அவசரமாக நிதி உதவி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறோம் என உலக உணவுத் திட்ட வதிவிடப் பணிப்பாளர் முஹமட் சாலிகீன் தெரிவித்துள்ளார்.
அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையானது ஒரு வருட காலத்தில் இருமடங்காக அதிகரித்திருப்பதால் தனது ஒதுக்கீட்டிற்கமைய 50 சதவீத தேவையையே உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தால் நிறைவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பானது உணவு உதவியை துண்டாடுவதென்றே அர்த்தப்படும். உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் தற்போது நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சாலிகீன் தெரிவித்ததுடன், இந்த வருட இறுதிவரை தேவையை நிறைவேற்ற அதாவது உலக உணவுத் திட்டத்தின் பணியை முன்னெடுக்க 36 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.