மன்னார் கறுக்காய் குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சியைத் தாங்கள் முறியடித்துள்ளதாகவும் இதில் 30 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், ஐந்து படையினர் சடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பாரிய படைநகர்வு முயற்சி குறித்து அவர்கள் கூறுகையில்;
கறுக்காய் குளம் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பலத்த ஆட்லறி, மோட்டார் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலை நடத்தியவாறு டாங்கிகள் சகிதம் பெருமெடுப்பில் பாரிய படைநகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
தரைப் படையினருக்கு ஆதரவாக விமானப் படை குண்டு வீச்சு விமானங்களும் கடும் தாக்குதலைத் தொடுத்தன.
இதற்கெதிராக விடுதலைப் புலிகளும் கடும் பதில் தாக்குதலைத் தொடுத்தனர். முன்னேற முயன்ற படையினர் மீது கடும் ஷெல் தாக்குதலும் மோட்டார் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இதையடுத்து இரு தரப்புக்குமிடையே உக்கிர சமர் நடைபெற்றது. காலை 8 மணிவரை நடைபெற்ற இந்தக் கடும் சமரில் 30 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதும் மிகப் பெருமளவான படையினர் படுகாயமடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட படையினரில் ஐவரது சடலமும் பி.கே.எல்.எம்.ஜி. 2 , ஏ.கே.எல்.எம்.ஜி. - 3, ரி 56-2 ரகத் துப்பாக்கிகள் - 5 மற்றும் பெருமளவிலான இராணுவப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இத் தாக்குதலில் இராணுவ ட்ரக் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் படையினரால் இழுத்துச் செல்லப்பட்டது. பலத்த இழப்புகளுடன் படையினர் தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதே நேரம் மன்னாரில் ஆலங்குளத்திற்கு வடக்கே நேற்றுக் காலை படையினர் பல முனைகளில் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது புலிகளின் நிலைகள் மீது விமானப் படை விமானங்கள் இரு வெவ்வேறு பகுதிகளில் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் அன்றூ விஜேசூரிய தெரிவித்தார்.
மன்னாரில் படை நகர்வுகளை மேற்கொள்ளும் நகரில் படையினருக்கு ஆதரவாகவே இந்த வான் தாக்குதல்களை கிபிர் விமானங்கள் மற்றும் எம்.ஐ-24ரக ஹெலிகொப்டர்கள் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்தக் களமுனையில் இடம் பெற்ற மோதல்களில் நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். புலிகள் தரப்பில் 15 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.