சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு அமைப்பின் (பவ்ரல்) தேர்தல் கண்காணிப்புக் குழுவில் அமைச்சர்களால் சிபார்சு செய்யப்பட்டோர் இடம்பெறுவதை ரவூப் ஹக்கீம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது குறித்து பிரஸ்தாப அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோவிற்கு ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில் அகதி முகாம்களில் கடமையாற்றும் முகாம் அதிகாரிகளை வன்னிபுனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிபாரிசின் பேரில் `பவ்ரல்' தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மிகவும் நம்பகமாக தெரியவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு விசுவாசமானவர்களையும் பக்கச்சார்பாக நடந்துகொள்வோரையும் கண்காணிப்பாளர்களாக நியமிப்பது தேர்தல் மோசடிகள் நடப்பதற்கு இடமளிப்பதோடு, தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதற்கும் தடையாக இருக்கும் என ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதற்கு பலத்த எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.