கிழக்கு மாகாண சபைக்கு இன்று சனிக்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில்;
கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று 10 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 1,070 வாக்கெடுப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இவ்வாக்கெடுப்பின்போது வாக்களிப்பதற்கு தகைமை பெற்றுள்ள வாக்காளர்களுக்கு அவர்களது வாக்கெடுப்பு நிலையம், வாக்கெடுப்புத் தினம் என்பவற்றை அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வுத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை வாக்கெடுப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வது உங்களுக்கும் வாக்கெடுப்பு நிலைய அலுவலர்களுக்கும் வசதியாகிருக்கும். ஆயினும், வாக்களிப்பதற்கு அது கட்டாயமான ஆவணமொன்றல்ல.
எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்று கிடைக்கப்பெற்றிருந்தால் வாக்களிக்க செல்லும்போது அதையும் ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டையை அல்லது வேறேதேனும் அடையாள அட்டையொன்றையும் கட்டாயமாக எடுத்துச் செல்லவும்.
அதிகாலையிலேயே உங்களது வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று நீங்கள் விரும்பும் ஒரு கட்சிக்கு அல்லது குழுவிற்கு வாக்கை அடையாளமிடலாம். அதைத் தொடர்ந்து விரும்பிய வேட்பாளர்கள் மூன்று பேருக்குக்கூடாதவாறு விருப்புக்களை அடையாளமிடலாம். வாக்களித்து முடிந்ததும் தேவையற்ற விதத்தில் எங்கேயும் தங்கி நிற்காது விரைவாக தத்தம் வீடுகளுக்கு அல்லது வேறேதேனும் அலுவல்கள் இருக்குமாயின் அவற்றிக்குச் செல்வது இன்றியமையாததாகும்.
மேலும், வாக்கெடுப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெறுவதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.