* இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
இலங்கை இனமோதலுக்கு போர்மூலம் தீர்வு கிடைக்காது என்பது இந்தியாவின் கொள்கை என மீண்டும் வலியுறுத்தியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமைதிப்பேச்சு மூலம் தீர்வு காண்பதில் தான் முன்னேற்றத்துக்கான வழி அடங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அரசு தலையிட்டு இலங்கைப் பிரச்சினையில் தீர்வு காணவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பிரதமருக்கு அவசரக் கடிதம் எழுதியிருந்தார். இதற்குப், பதிலளித்து பிரணாப் முகர்ஜி, ராமதாஸுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடிதத்தில் முகர்ஜி மேலும் கூறியிருப்பதாவது;
இலங்கை இன மோதலுக்குப் போர் மூலம் தீர்வு கிடைக்காது என்பது இந்தியாவின் கொள்கை. ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அமைதிப் பேச்சுமூலம் தீர்வு காண்பதில் தான் முன்னேற்றம் உள்ளது.
இலங்கையுடனான இந்திய அரசின் செயல்பாட்டில், தமிழ்ச் சமூகத்தினரின் நலன்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னுரிமை அளிக்கிறோம். இதைக் கருத்தில் கொண்டுதான் 13 ஆவது திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்தும் இலங்கை அரசின் நோக்கத்தை முதல் நடவடிக்கை என வரவேற்கிறோம்.
இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற் படையின் தாக்குதல் பெரும்பாலும், இலங்கை கடல் எல்லைக்குள் தான் நடக்கிறது. எனவே, சர்வதேச கடல் எல்லைக்கோட்டை மதித்து நடக்க வேண்டியது முக்கியம். இந்திய மீனவர்களை மனித நேயத்துடன் நடத்துமாறு இலங்கைக் கடற்படையிடம் தெரிவித்துள்ளோம்.