ஐ.சி.சி.கிரிக்கெட் குழு, நடுவர் தீர்ப்புகளை மேலும் திறம்படச் செய்வதற்கும், துல்லியத்தைக் கடைப்பிடிப்பதற்கும் சில புதிய முறைகளை பரிந்துரை செய்துள்ளது.
டுபாயில் நடைபெற்றுவரும் இரண்டு நாள் கூட்டத்தில் சில முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
அதாவது ஒவ்வொரு இனிங்ஸிலும் ஒரு அணி 3 முறை நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரலாம்.
முதல் களநடுவர் தனது தீர்ப்பை வழங்குவார். ஆனால், தான் அவுட் இல்லை என்று கருதினாலோ, அதேபோல் தவறாக அவுட் என்று நடுவர் தீர்ப்பு வழங்கினாலோ நடுவரிடம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரலாம். பின், கள நடுவர்களும், 3 ஆவது நடுவரும் கலந்தாலோசிப்பார்கள். இறுதித் தீர்ப்பை களநடுவரே வழங்குவார்.
மேலும் நாளுக்கு நாள் சர்ச்சைக்குரியதாக மாறி வரும் எல்.பி.டபிள்யூ தீர்ப்பையும் தொழில்நுட்ப உதவியுடன் தீர்க்கவும் ஐ.சி.சி.யிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் `ஹாக்-ஐ' தொழில்நுட்பம் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படவுள்ளது. அதாவது வீசப்பட்ட பந்து துடுப்பாட்ட வீரரை வந்தடைந்து எங்கு படுகிறதோ அதுவரையில் மட்டும்தான் 3 ஆவது நடுவர் `ஹாக்-ஐ' தொழில்நுட்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பந்து துடுப்பாட்ட வீரரைத் தாண்டிய பிறகு `ஹாக்- ஐ கொடுக்கும் கணிப்புகளை 3 ஆவது நடுவர் ஏற்கக்கூடாது.
இதிலும் கள நடுவரே இறுதித் தீர்ப்பை வழங்குவார்.
இதுபோன்ற புதுமைகளை ஐ.சி.சி.கிரிக்கெட் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை தலைமைச் செயற்குழு ஏற்றபின் டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்த புதிய விதிமுறைகள் பரிசோதிக்கப்படும்.