டெல்லி ஆட்டம் குறித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
* நேற்று முன்தினம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டில்லி டேர்டெவில்ஸ் அணியின் காம்பிர் - தவான் ஜோடி 121 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் எடுத்த ஜோடி என்ற சாதனை படைத்தது.
* சொய்ப் மாலிக் வீசிய கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 15 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையேற்பட்டது. சிறப்பாக விளையாடிய கோனி முதல் பந்தில் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்களுக்கு நிம்மதி பிறந்தது. அடுத்த பந்தை மாலிக் `வைட்டாக' வீசினார். தொடர்ந்து அசத்திய கோனி இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தில் இவர் ஒரு ஓட்டம் எடுத்தார். அடுத்த பந்தில் பத்ரிநாத் 2 ஓட்டங்கள் அடிக்க ஆட்டம் சமநிலைக்கு வந்தது.
* ஐந்தாவது பந்தை சொய்ப் மாலிக் கட்டுக்கோப்பாக வீச ஓட்டம் கிடைக்கவில்லை. இதையடுத்து கடைசிப் பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க வேண்டும். இல்லையென்றால் `போல்-அவுட்' முறையில் வெற்றி தீர்மானிக்கப்படும் என்ற பரபரப்பான நிலையேற்பட்டது. பத்ரிநாத் பந்தைத் தூக்கி அடித்தார். பந்து உயரே செல்ல... ஷிகார் தவான் ஓடி வந்து... பிடிக்கப் பார்த்தார். ஆனால், அவரது கை நழுவ... சென்னை வீரர்கள் வெற்றிக் கோஷமிட்டனர்.
* டில்லி அணியின் தோல்விக்கு கப்டன் சேவாக்கும் ஒரு காரணம். 14 ஆவது ஓவரை படு மோசமாக வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியின் மோர்கல் அடித்து நொறுக்கினார். முதல் பந்தில் `டீப் மிட் விக்கெட்' திசையில் இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். `புல் டோசாக' வந்த அடுத்த பந்தையும் சிக்சருக்கு விரட்டி வாண வேடிக்கை காட்டினார். அடுத்த பந்திலும் சிக்சர் அடித்தார். இப்படி `ஹாட்ரிக் சிக்சர்' அடித்த கையோடு நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். 5 ஆவது பந்தில் ஓட்டமில்லை. 6 ஆவது பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க, இந்த ஓவரில் மட்டும் சென்னை அணிக்கு ஒட்டு மொத்தமாக 23 ஓட்டங்கள் (6,6,6,4,0,1) கிடைத்தது.
* கோனியை அனைவருக்குமே தெரியும். சென்னை அணியில் இடம்பெற்றிருக்கும் இளம் வீரர் தான் மன்பிரித் கோனி. இவர் தான் நேற்று முன்தினம் கடைசி ஓவரில் கலக்கினார். சிக்சர் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். பஞ்சாப்பைச் சேர்ந்த 24 வயதான கோனி தற்போதைய ஐ.பி.எல். தொடரில் அசத்தி வருகிறார். கடந்த போட்டியில் 2 சிக்சர் அடித்தார். பந்து வீச்சிலும் தூள் கிளப்பும் இவர் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.