ஐ.பி.எல்., தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் அசத்தலாக ஆடிய தோனியின் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடைசிப் பந்தில் `த்ரில்' வெற்றி பெற்றது. ஷேவாக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மகத்தான எழுச்சி கண்டது. ஷேவாவக் அணி சார்பில் அரைச்சதம் அடித்த காம்பிர், தவான் ஆகியோரது ஆட்டம் வீணானது.
இந்தியன் பிரிமியர் லீக்கின் (ஐ.பி.எல்.,) `ருவென்ரி - 20' தொடரில் நேற்று முன்தினம் டில்லியில் நடந்த 28 ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்ப கிங்ஸ் அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற தோனி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
டில்லி அணியில் பாட்டியாவுக்கு பதிலாக மனோஜ் திவாரி களமிறங்கினார். சென்னை அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. மோசமான போர்மிலிருந்த பார்த்திவ், அனிருதா, ஜோகிந்தர், நிற்னி நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக வித்யூத், கப்புகெதர, பழனி, பாலாஜி இடம்பிடித்தனர்.
தொடக்க வீரர்களாக ஷேவாக், காம்பிர் களமிறங்கினர். சென்னைக்கு எதிரான முதல் லீக் போட்டியில் அசத்திய இந்த ஜோடி மிரட்டியது. அதிரடியாக விளையாடிய ஷேவாக் மோர்கல் பந்தில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து விளாச முயன்ற இவர் (23) கோனியின் பந்தில் போல்டானார். டிவிலியர்ஸ் வந்த வேகத்தில் `டக்' அவுட்டாகி ஏமாற்றினார்.
அடுத்து வந்த தவான், காம்பிருடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. பழனி வீசிய 11 ஆவது ஓவரில் காம்பிர் ஒரு சிக்ஸர், தவான் ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 14 ஓட்டங்கள் எடுத்தனர். தொடர்ந்து அசத்திய காம்பிர், கோனி பந்தில் இமாலய சிக்ஸர் அடித்து அரைச்சதம் அடித்தார். பழனி வீசிய அடுத்த ஓவரில் `ஹட்ரிக்' பவுண்டரி அடித்து கலக்கினார். ஒரு சிக்ஸர், 11 பவுண்டரி விளாசிய இவர் 49 பந்தில் 80 ஓட்டங்கள் எடுத்து பாலாஜி பந்தில் வெளியேறினார்.
மறுமுனையில் அதிரடியைத் தொடர்ந்த தவான், பாலாஜி பந்தில் சிக்ஸர் அடித்து அரைச்சதம் பதிவு செய்தார். இவர் 59 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 6 பவுண்டரி) எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார். சொய்ப் மாலிக் (2) இம்முறை சோபிக்கவில்லை. தினேஷ் கார்த்திக் 6, திவாரி 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர். டில்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் எடுத்தது.
188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை சேஸ் செய்த சென்னை அணிக்கு வித்யூத், பிளமிங் அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். மெக்ராத் வீசிய முதல் ஓவரில் வித்யூத் இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். டில்லி டேர்டெவில்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி ஆசிப் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசியது. பின்னர் யோ மகேஷ் வீசிய 6 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி உட்பட 20 ஓட்டங்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில், வித்யூத் 40 ஓட்டங்களுக்கு (6 பவுண்டரி, 1 சிக்ஸர்) வெளியேறினார்.
நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த பிளமிங் சொய்ப் மாலிக் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து அதிரடிக்கு மாறினார். அபாரமாக ஆடிய இவர் 7 பவுண்டரிகள் உட்பட, 28 பந்தில் 44 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மோர்கல், தோனியுடன் ஜோடி சேர்ந்தார். மிரட்டலாக ஆடிய மோர்கல், ஷேவாக் வீசிய 14 ஓவரில் `ஹட்ரிக்' சிக்ஸர் அடித்து ஓட்ட விகிதத்தை ரொக்கெட் வேகத்தில் உயர்த்தினார். சென்னை அணிக்கு இந்த ஓவரில் மட்டும் 23 ஓட்டங்கள் கிடைத்தது. சிறப்பாகக் களத்தடுப்பு செய்த ஷேவாக் அடுத்த ஓவரில் மோர்கலை ரன் - அவுட் செய்து, பழி தீர்த்துக் கொண்டார். அதிரடியாக விளையாடிய மோர்கல் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 15 பந்தில் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
சூழ்நிலை அறிந்து விளையாடிய தோனி 33 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்தார். கப்புகெதர 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து சொய்ப் மாலிக் வீசிய கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான சூழ்நிலையேற்பட்டது. இதில் அதிரடியாக விளையாடியா கோனி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.
சென்னை `சுப்ப கிங்ஸ்' 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்து, கடைசிப் பந்தில் `த்ரில்' வெற்றி பெற்றது. கோனி 13, பத்ரிநாத் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர்.