ஐ.சி.சி. கிரிக்கெட் குழுத் தலைவர் பதவியிலிருந்து கவாஸ்கர் விலகினார்.
இந்திய முன்னாள் கப்டனும் டெஸ்ட் வரலாற்றில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்த முதல் வீரருமான சுனில் கவாஸ்கர் கடந்த எட்டு ஆண்டுகளாக ஐ.சி.சி. கிரிக்கெட் தலைவராக இருந்து வந்தார். வர்ணனையாளர், கட்டுரை எழுதுவதென மிகவும் `பிஸியாக' இருந்தார்.
சமீபத்திய அவுஸ்திரேலியத் தொடரின் போது ஹர்பஜன் - சைமண்ட்ஸ் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பிரச்சினையில் சர்வதேச கிரிக்கெட் சபையை (ஐ.சி.சி.) கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார். `வெள்ளை இன' வீரர்களுக்கு சாதகமாக முடிவுகள் எடுப்பதாகக் கட்டுரையில் குறிப்பிட்டார்.
மேலும் `டைனோசர்' போன்ற அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளால் இந்தியாவின் முன்னேற்றத்தை ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை என்றும் கூறினார். இதனால், ஐ.சி.சி. நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். ஐ.சி.சி. பதவியிலிருந்து கொண்டே விமர்சிப்பது சரியல்ல என்று கருத்துத் தெரிவித்தனர். ஊடகம் அல்லது ஐ.சி.சி. பதவி ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி கவாஸ்கரை கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஊடகப் பணிக்கு முக்கியத்துவம் அளித்த இவர் ஐ.சி.சி. பதவியிலிருந்து விலகுகிறார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில்;
"கடந்த எட்டு ஆண்டுகளாக கௌரவமாக கிரிக்கெட் தலைவர் பதவியில் முழுமையான மகிழ்ச்சியுடன் இருந்துவிட்டேன். ஐ.சி.சி. மற்றும் இரண்டு பணிகளை செய்யமுடியாது என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. தற்போது பதவி விலகும் முடிவை எடுத்துள்ளேன்" என்றார்.