கவீரன்
இன்றுடன் இக்கட்டுரைகள் ஆரம்பமாகி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. மக்களின் வரவேற்பைப் பெறுமோ இவை என்று சந்தேகித்து நின்ற எனக்குப் பல இடங்களில் இருந்து, பல தரப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கள், பயனுள்ள விமர்சனங்கள் ஆகியன என் மனதுக்கு இதம் ஊட்டுகின்றன. இவற்றிற்கு அத்திவாரம் நாட்டிய "தினக்குரல்" ஆசிரியருக்கு மேலும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கின்றேன். இக் கட்டுரைகள் விரைவில் முற்றுப் பெறுவன என்பதையும் இத்தால் கூறி வைக்கின்றேன்.
முனிவம்சத்து மதுரைத் தமிழர்கள் முந்நூறு வருடங்களுக்கு முன் சிங்கள மன்னருக்கு முறைப்படி மகுடஞ் சூட்ட வந்து மதம் மாறி இனம் மாறி இன்று "நாம் சிங்களவர்கள்" என்று மார் தட்டிக் கூறிவரும்நிலையை அடைந்துள்ளமை பற்றி நான் முன்னர் கூறியுள்ளேன்.
குறிக்கோள்களின் குறி தவறினால் அதே நிலைதான் எம்மையெல்லாம் காத்திருக்கின்றது என்பதை நாங்கள் உணர வேண்டும். நாட்டை ஓரின, ஓர் மத சார்பாக வழி நடத்தப் பல திட்டங்கள் சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே வகுக்கப்பட்டு வந்துள்ளன என்பது இப்பொழுது தெரிய வந்துள்ளது. முதலில் 1950களில் திருகோணமலைப் பிரதேசத்தைச் சுற்றி அரச குடியமர்த்தல் நடைபெற்ற அதே நேரம் ஆர்.ஜி.சேனநாயக்க காலத்தில் திருமலை நகர சபை எல்லைகளுக்குள்ளான நிலங்களையும் வீடுகளையும் கூடிய பணம் கொடுத்து சிங்கள மக்கள் விலைக்கு வாங்கும் படலம் ஆரம்பமாகியது.
பின்னர் இலங்கையின் சரித்திரத்தைத் திரித்து அமைத்து இலங்கைத் தமிழர்களின் வருகை அண்மையதே என்ற கருத்தை நிலைநிறுத்தும் விதத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சரித்திரமே மாற்றியமைக்கப்பட்டது. பரணவிதாரண வரலாற்றைத் திசைமாற்ற எடுத்த நடவடிக்கைகள் பற்றி முன்னரே கூறியுள்ளேன். இன்று அது போன்ற பல திருகுதாளங்கள் திரைமறைவில் அதிகார பலங்கொண்டு நடைமுறைப்படுத்தி வரப்படுகின்றன. அதே நேரம் சுதந்திரம் கிடைத்த நாட்களில் இருந்து அரசியல் உடன்பாடுகளைக் கிழித்தெறிய ஆவன செய்யப்பட்டன. பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்பாட்டைத் தகர்த்தெறிய வெறும் இருநூறு பௌத்த பிக்குமார் போதுமாயிருந்தனர் என்று பார்க்கும் போது இந்த இரகசியத் தமிழர்கள் எதிர்ப்புக் கும்பலின் பலம் புரிகிறது. தமிழ் மக்களுக்கு உரித்துக்கள் கொடுக்கப்பட்டால் அது சிங்கள இனத்திற்குச் செய்யும் துரோகமே என்ற பிரம்மாஸ்திரத்தைப் பாவித்தே இந்தக் கும்பல் தமது நோக்குகளுக்கு வெற்றிப்பாதை அமைத்துக் கொடுத்து வருகின்றது.
இப்பொழுது தமிழ் பேசும் இரு மக்கட் கூட்டத்தினரின் ஒற்றுமையைக் குலைத்து ஒருவரோடு ஒருவரை மோதவிட்டுத் தாம் குளிர்காய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை எம் மக்கள் எந்தளவுக்குப் புரிந்து வைத்துள்ளார்களோ நான் அறியேன். மரங்களில் மயங்கி வனத்தினுள் வழிதவறி வந்து விட்டோம் என்ற நிலைப்பாட்டைப் புரியாமல் இருக்கின்றோமா என்று எண்ண வேண்டியுள்ளது.
அப்போதைய பிரதம மந்திரியாகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து 82 ஆசனங்களையும் பல கட்சிகள் சேர்ந்த ஜனாதிபதி சந்திரிக்காவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 105 ஆசனங்களையுந் தேர்தலில் பெற்றன.
ஜனதா விமுக்தி பெரமுனவுடன் (ஜே.வி.பி) சேர்ந்து சந்திரிக்காவின் கட்சி அர சாங்கம் அமைக்கப் போதிய ஆசனங்களைப் பெற்றது. இந்தத் தேர்தலில் ஜனதா விமுக்திப் பெரமுனவின் அரசியல் முன்னேற்றம் புலப்பட்டது. 2001ஆம் ஆண்டில் 16 ஆசனங்களைப் பெற்ற அக்கட்சி 2004 ஆம் ஆண்டு நடந்த இந்தத் தேர்தலில் 39 ஆசனங்களை சந்திரிக்காவின் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததால் பெற்றது. தமிழ்க் கட்சிகள் 22 ஆசனங்களைப் பெற்றன.
இந்தத் தேர்தல் புத்த பிக்குமார் அரசியல் கட்சி ரீதியாகப் பிரவேசிக்க வழிவகுத்தது. பின்னணியில் நின்று செயல்ப்பட்டவர்கள் முன்னணிக்கு வரத் தொடங்கினார்கள். ஜாதிக ஹெல உறுமய என்ற அவர்களின் கட்சி 9 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5 ஆசனங்களையும் பெற்றன. மலையக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் ஈ.பி.டி.பி. என்ற ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆ சனத்தையும் பெற்றன.(105+82+22+9+5+1+1=225)
2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதந் தொடக்கம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சிறகொடிந்த பறவை போல் செயற்பட்டுக் கொண்டிருந்தது. ஏனென்றால் அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தி மூன்று முக்கிய அமைச்சுக்களை ஜனாதிபதி சந்திரிக்கா கையேற்றதன் மூலம் ரணிலின் அரசாங்கம் பலம் இழந்தது. ரணிலை தேர்தலில் வெல்ல சந்திரிக்கா கையாண்ட யுக்தி முன்னையவர் விடுதலைப்புலிகளின் உடந்தையாளர் என்று அடையாளங் காட்டியதே. இது சிங்கள வாக்காளர்களிடம் எடுபட்டது. தனது காலத்தில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு பலரின் இரங்கத்தக்க இறப்புகள் இல்லாதாக்கப்பட்டுப் பொருளாதாரம் விருத்தியடைந்தது என்ற ரணிலின் தேர்தல் பிரசாரம் சிங்கள மக்களிடையே எடுபடவில்லை. ஆகவே சிங்கள மக்களின் பெரும்பான்மையானோர் தமக்கு எது நடந்தாலும் பரவாயில்லை வடகிழக்குத் தமிழர்களைப் போரில் அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்த்தான் இருந்து வருகிறார்கள் என்று கொள்ள இடமிருக்கிறது. அண்மைக்காலங்களில் ஜே.வி.பி, ஹெல உறுமய போன்ற கட்சிகளின் தேர்தல் வெற்றிகளும் இந்தக் கருத்தை ஊர்ஜிதப்படுத்துபவையாகவே இருக்கின்றன. இன்றும் கிழக்கு மாகாணத் தேர்தலில் ரணில் விடுதலைப் புலிகளின் உடந்தையாளர் என்ற கருத்தே சிங்கள மக்கள் முன்னிலையிலும், நாம் கிழக்கிலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற குறுகிய நோக்கைக் கொண்ட எம்மவர்கள் முன்னிலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலை அவதானிக்க வந்த பொது நலவாய நாடுகளின் அவதானிப்புக் குழு தேர்தல் பற்றிப் பின்வருமாறு கூறியது;
"வடக்கு கிழக்கு அல்லாத மற்றைய பிரதேசங்களின் தேர்தலானது சுதந்திரமான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்றது. கட்சிகள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடக் கூடியதாக இருந்தது. வாக்காளர்கள் தமது வாக்குகளைச் சுதந்திரமாக வாக்களிக்கக் கூடியதாக இருந்தது".
தொடர்ந்து வடக்கு கிழக்கைப் பற்றிக் கூறுகையில் இவ்வாறு உரைத்தார்கள்;
"இம்முறை ஒரு கட்சி மட்டுமே சுதந்திரமாக வடக்கில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக் கூடியதாக இருந்தது. கிழக்கில் கூட தேர்தல் பிரசாரங்கள் சம்பந்தமாகப் பாரிய கட்டுப்பாடுகள் இருந்தன. தேர்தல்களில் பங்குபற்றுபவர்கள் யாவரும் சமநிலையில் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி நடந்து கொண்டால் மட்டுமே ஜனநாயகம் நிலைபெறும் என்பதை உணர்ந்து கட்சிகள் யாவும் அடுத்துவருந் தேர்தல்களுக்கு முன் அவ்வாறு செயற்பட உடன்பாட்டுக்கு வந்தாக வேண்டும்".
அதேநேரம் அவர்கள் மேலும் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தனர்;
"இந்தப் பொதுத் தேர்தல் வடக்கு கிழக்கில் ஒரு பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாங்கள் அவதானித்துள்ளோம். அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைகலப்புத் தொடங்கிய நாட்களின் பின் இந்தத் தேர்தலின் போதே வழமையான ஜனநாயக ரீதியான அரசியலையும் நம்பகரமான தேர்தல்களையுங் காணக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்பட்டன".
மேற்கண்ட அவர்களின் விமர்சனங்களால் மேற்படி பொதுநலவாய அவதானிப்புக் குழு எமக்கு எடுத்தியம்ப வந்த கருத்து என்னவென்று ஆராய்ந்தால் நாட்டு மக்களின் உள்ளார்ந்தஅபிலாசைகளைப் பலாத்கார நடவடிக்கைகள் மூலம் பிரதிபலிக்கப்பார்ப்பது யதார்த்தத்திற்கு முரணாகும் என்பதே. ஆயுதந் தாங்கும் குழுக்கள், அதேபோல் அரசாங்க அதிகாரம் பெற்ற குழுக்கள் மக்களின் உண்மையான உள்ளக் கிடக்கைகளை மறைத்துவிட வன் செயல்களிலும் அச்சுறுத்தல்களிலும் ஈடுபடலாம். பலாத்காரத்தால் ஏற்படுத்தப்படும் அரசியல் நிர்ணயிப்புக்கள் மக்களின் உண்மையான உள்ளக்கிடக்கைகளை பிரதிபலிக்காத வரையில் ஜனநாயகம் விடைபெற்றுள்ளதாகக் கருத வேண்டும் என்பதையே. என்றாலும் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. அன்று தாய் சொல்லிக்கொடுத்ததை இன்று சேய் கிழக்கில் சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருவதாக அறிகின்றோம். அது மட்டுமல்ல, சேய்க்கு அரசாங்கமே சேர்ந்திருந்து ஒத்துழைப்பு நல்குகின்றதென்றால் எம் நாட்டின் இன்றைய அரசியல் நிலை, அரசியல் கலாசாரம் எத்தகையது என்று நான் கூறத் தேவையில்லை.
நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த நாட்களில் இருந்து பலாத்காரம் எல்லாக் கட்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்கலாம். சிறைச்சாலைகளில் பலாத்காரம், பொலிஸ் நிலையங்களில் பலாத்காரம், கல்லூரிகளில் பலாத்காரம், பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பலாத்காரம், தொழிற் கூடங்களில் பலாத்காரம், குடும்பங்களில் பலாத்காரம், அரசியலில் பலாத்காரம் என்று வன்முறையும்,முரட்டுத்தனமும் வலிமையால் காரியங்களைச் சாதிப்பதுமே எமது கலாசாரமாக உருவெடுத்து வந்துள்ளது. அதாவது வன்முறைக் கலாசாரமாக உருவெடுத்துள்ளது. வன்முறைக் கலாசாரம் நீங்கவேண்டுமானால் மக்கட் தலைவர்கள் புதிய பாதை அமைத்துக்கொடுக்க வேண்டும். ஆனால் தலைவர்களே இன்று வன்முறையைத் தேர்ந்தெடுக்கும் போது மக்கள் என்ன செய்யமுடியும்?. சாரத்தை முழங்காலின் மேல் தூக்கிப் பிடிப்பவனையே இன்று நாம் சாதிப்பாளனாகக் கருதுகின்றோம்.
மகிந்த ராஜபக்ஷ 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாந் திகதியன்று சந்திரிக்காவினால் பிரதமர் ஆக்கப்பட்டார். அடுத்து நடந்தவை பற்றி அடுத்த வாரம் ஆராய்வோம்.