வி.சபேசன்
இன்றைக்கு ஈழத் தமிழர்களின் ஊடகங்கள் மத்தியில் அதிகமாக சிலாகிக்கப்படுவது எதுவென்று பார்த்தால், அது கொசோ வோவின் சுதந்திரப் பிரகடனம் பற்றியதாகத்தான் இருக்கிறது. கொசோவோவின் நிலைமையை தமிழீழத்தோடு ஒப்பிட்டு ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
முக்கியமாக தமிழீழத்தை விட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் விடுதலைப் போரில் குறைவான இழப்பைச் சந்தித்ததுமான கொசோவோவின் சுதந்திர பிரகடனத்தை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகள் அங்கீகரிக்கத் தயாராக இருப்பது குறித்து ஏக்கமும் வெளியிடப்படுகிறது.
கொசோவோவின் சுதந்திரத்தை அங்கீகரிக்க பெரும்பாலான மேற்குலக நாடுகள் தயாராக இருப்பதற்கு என்ன காரணம்? தமிழீழதின் சுதந்திரப் போரை அங்கீகரிக்க மறுப்பதற்கு என்ன காரணம்?
கொசோவோவின் வரலாற்றை மிகச் சுருக்கமாக ஒரு முறை பார்ப்போம். கொசோவோ தன்னுடைய வரலாற்றில் பெரும்பாலும் சுதந்திரமாக இருந்தது இல்லை. ஆரம்பத்தில் கொசோவோ ரோமப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு கொசோவோவை சுற்றி இருந்த இனங்கள் மாறி மாறி ஆண்டன.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டளவில் ஹங்கேரியன் ஆட்சியின் கீழ் கொசோவோ வந்தது. அதன் பிறகு பையானிச ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பின்பு ஒஸ்மானியப் படையெடுப்பு என்று அழைக்கப்படும் துருக்கிய படையெடுப்புக்கு உட்பட்டு மிக நீண்ட காலம் துருக்கியின் ஆட்சியின் கீழ் இருந்தது. இக்கால கட்டத்தில்தான் இன்றைய பொஸ்னியா, அல்பேனியா, கொசோவோ போன்ற நாடுகளில் இஸ்லாம் மதம் பரவியது.
1912 ஆம் ஆண்டு கிழக்கு ஐரோப்பாவில் நடந்த யுத்தத்தில் கொசோவோ சேர்பியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. யுகோஸ்லாவியா உருவாக்கப்பட்டதன் பின்பு 1974 ம் ஆண்டு கொசோவோவிற்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டு, ஒரு சுயாட்சி மிக்க மாகாணமாக அது பரிணமித்தது.
1989 ஆம் ஆண்டில் யுகோஸ்லாவிய அதிபராக இருந்த மிலோசோவிச் கொசோவோவின் அதிகாரங்களை ரத்து செய்தார். அதன் பிறகுதான் பிரச்சினை ஆரம்பமானது. ஆரம்பத்தில் கொசோவோ மக்களுக்கு தனிநாடாக பிரிந்து செல்லும் எண்ணம் இருக்கவில்லை. முன்பு இருந்ததைப்போன்று ஒரு சுயாட்சி மிக்க மாகாணமாக இருந்தால் போதும் என்பதுதான் அவர்களுடைய எண்ணமாக இருந்தது. தனிநாடாக பிரிவது பற்றிய சிந்தனை உருவானது சில ஆண்டுகளுக்கு முன்புதான்.
விடுதலைக்கு போராடும் மற்றைய இனங்களோடு ஒப்பிடும் போது உண்மையிலேயே கொசோ வோ மிகக் குறுகிய காலத்திலும் மிகக் குறுகிய இழப்போடும் தன்னுடைய சுதந்திரத்திற்கான அங்கீகாரத்தின் முக்கிய கட்டத்தை அடைந்துவிட்டது. ஆனால், கொசோவோ பெற்றிருப்பது அல்லது பெறப்போவது உண்மையான சுதந்திரமா?
இன்றைய கொசோவாவின் நிலை என்னவென்று இப்பொழுது பார்ப்போம். அதனுடைய பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் நேட்டோ படையணிகளால் நிர்வகிக்கப்படுகிறது. கொசோவோவின் இராணுவமாகக் கருதப்படுகிறது KFOR நேரடியாக நேட்டோவின் கட்டுப்பாட்டிலும் வழிநடத்தலிலும் இயங்குகிறது.
சட்டம், ஒழுங்கு மற்றும் நிர்வாகம் சார்ந்த விடயங்களை ஐ.நா.சபையினால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படுகின்ற என்கின்ற கட்டமைப்பு நிர்வகிக்கின்றது.
கொசோவோ முழுவதும் மேற்குலகின் படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசியல், பாதுகாப்பு, அபிவிருத்தி என்று அனைத்து விடயங்களையும் இந்த மேற்குலக நாடுகள் தீர்மானிக்கின்றன. சேர்பியாவிடம் இருந்து கொசோவோ சுதந்திரம் பெற்றாலும் இந்த மேற்குலக நாடுகளிடம் இருந்து தன்னுடைய இறைமையை கொசோவோ மீட்குமா என்பதே இதில் உள்ள முக்கிய கேள்வியாகும்.
கொசோவோவை மேற்குலக நாடுகள் பல அங்கீகரிப்பதற்கு சுயநலம் சார்ந்த பல காரணங்கள் உள்ளன. அச்சம் சார்ந்த சில காரணங்களும் உள்ளன. இந்தோனேசியாவில் இருந்து மொறோக்கோ வரை நீண்டு பரவிவரும் இஸ்லாமிய தீவிரவாதம் ஐரோப்பியாவிற்குள்ளும் பரவி விடக்கூடாது என்பதில் மேற்குலக நாடுகள் மிகக் கவனமாக இருக்கின்றன.
கொசோவோ இஸ்லாமிய மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. ஆனால், அங்கே மத அடிப்படைவாதம் இல்லை. இளம் சமுதாயத்தினர் மேற்குலக கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். மசூதிகளுக்கு செல்லும் மக்கள் தொகை வெகு வெகு குறைவு.
ஆனால், கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சேர்பியாவிற்கு எதிராக இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ ஒரு நீண்ட விடுதலைப் போரை நடத்துகின்றபோது, அங்கே இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் நுழைவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிடும்.
இஸ்லாமிய மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பொஸ்னியா, கொசோவோ போன்ற நாடுகளின் பிரச்சினைக்குள் மேற்குலகம் உடனடியாகவே தலையிட்டு ஒரு தீர்வைக் கொண்டு வந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம்.
ஐரோப்பாவில் எக் காரணம்ெகாண்டும் இஸ்லாமிய அடிப்படை வாதம் நுழைந்து விடக்கூடாது என்பதில் மேற்குலகம் உறுதியாக இருக்கிறது.
இன்றைக்கு கொசோவோவின் இஸ்லாமிய மக்கள் கொசோவோ நாட்டின் தேசியக் கொடியோடு அமெரிக்கக் கொடியினையும் உயர்த்திப் பிடித்தபடி நடனம் ஆடுகிறார்கள். இன்றைய உலகில் காணக்கிடைப்பதற்கு மிக அரிதான காட்சி இது.
மேற்குலகம் சேர்பியாவிடம் இருந்து கொசோவோ மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதாகச் சொல்லி, கொசோவோவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆகவே, உண்மையான சுதந்திரம் கொசோவோ மக்களுக்கு என்றைக்கு கிடைக்கும் என்பது பதில் தெரியாத ஒரு கேள்வி.
கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை முதலில் அங்கீகரித்த நாடாக ஆப்கானிஸ்தான் திகழ்கிறது. மேற்குலக நாடுகளிடம் தன்னுடைய இறைமையை இழந்து நிற்கின்ற ஆப்கானிஸ்தான் அதே நிலையில் உள்ள கொசோவோவை அங்கீகரித்தது ஒரு வேடிக்கையான விடயம்தான்.
கொசோவோ நிறைய சமரசங்களை செய்து கொண்டு, தன்னுடைய இறைமையை இழந்து, தனிநாடு என்ற அந்தஸ்தினை பெற முயற்சிக்கின்றது. `இறைமை' என்ற விடயத்தில் தமிழீழம் எந்தச் சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இல்லை என்பதுதான் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விடயம்.
கடந்த மாவீரர் தினத்தில் தேசியத் தலைவர் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். உலக நாடுகள் இலங்கைத் தீவில் கொண்டிருக்கும் நலன்களை தாம் புரிந்து கொள்வதாக குறிப்பிட்டார். அவர்களுடைய நலன்களுக்கு தாம் எதிரானவர்கள் அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், தமிழீழ நலன்களே விடுதலைப் புலிகளுக்கு முதன்மையானது என்பது சொல்லித்தெரியவேண்டியது இல்லை. மேற்குலக நாடுகளின் அனுசரணையோடு சுதந்திரம் அடைந்திருக்கும் கிழக்குத் தீமோர், மொன்ரநேக்ரே, கொசோவோ போன்ற நாடுகள் பற்றி விடுதலைப் புலிகள் பேசுவது ராஜதந்திர ரீதியில் அமைந்தவை. ஆனால், தமிழீழம் அவ்வாறான முறையில் உருவாகாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
பன்னாட்டுப் படைகள் தமிழர் தாயகம் எங்கும் வியாபித்து நிற்க, கிடைக்கும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமும் அல்ல. எதிரிப் படைகளை விரட்டி அடித்து எரித்திரியா எப்படி சுதந்திரம் அடைந்ததோ, அப்படித்தான் தமிழிழீமும் சுதந்திரம் பெறும்.
கொசோவோவின் சுதந்திர வேட்கையை ஆதரித்து வாழ்த்துகின்ற அதேவேளை, நாம் எமது இறைமையை இழக்காத ஒரு சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.