Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
இந்தியர்கள் சாப்பாட்டு ராமன்களா? உருவாக்கிய சர்ச்சை
[11 - May - 2008] [Font Size - A - A - A]
*புஷ்ஷின் கருத்து

ஆர்.எம்.கே.

இந்தியா என்ற வார்த்தைக்கு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் அகராதியில் கசப்புமிக்க வேப்பங்காய் என்று அர்த்தம் போடப்பட்டிருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மனிதர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவையும் இந்தியர்களையும் வார்த்தைகளால் வறுத்தெடுப்பார். செயல்பாடுகளால் சீண்டிவிடுவார். அதற்கான பதிலடியை வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொள்ளவும் தவறுவதில்லை.

ஒருமுறை தன்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு `இந்தியா' என்று பெயர்சூட்டி அழைத்தது இந்தியர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது இந்தியர்களை `சாப்பாட்டு ராமன்கள்' என்பது போல வர்ணித்துக் குற்றம் சாட்டியிருப்பது பலத்த சர்ச்சையைப் பற்ற வைத்துள்ளது. புஷ்ஷுக்கு எதிராக இந்தியாவில் கட்சி வித்தியாசமின்றி கண்டனக் கணைகளை வீசிவருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டது வாஷிங்டன் நகருக்கு அருகே மிசோரி என்ற இடத்தில் நடந்த பொருளாதார மாநாடுதான். உணவுப் பற்றாக்குறை மற்றும் சர்வதேச பொருளாதாரம் தொடர்பான பரஸ்பர கலந்துரையாடல் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது மேடையில் புஷ் பேசிய உரையில் இடம்பெற்ற ஒவ்வொரு வார்த்தையும் இந்தியர்களைக் குற்றஞ்சாட்டும் நோக்கத்துடனேயே இருந்தது. அதில் இருந்து சில பகுதிகளைப் பார்த்தாலே உங்களுக்கு விடயம் புரிந்துவிடும்.

`உலகம் தழுவிய அளவில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் உணவுப் பொரட்களின் தேவை கடுமையாக அதிகரித்துள்ளதுதான். இந்த தேவை அதிகரிப்புக்குக் காரணம், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழும் மக்களின் சராசரி வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. இந்தியர்களின் வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டதால் அங்கு சென்று பொருட்களை விற்க உலகின் பல நாடுகளும் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.

இப்போது நான் சொல்லப்போகும் தகவல் உங்களை ஆச்சரியப்படுத்தும் என்று நம்புகிறேன். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் முப்பத்தைந்து கோடிப் பேர் நடுத்தர வர்க்கத்தினர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. உண்மையில் இந்த எண்ணிக்கை நம்முடைய அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் தெரியுமா? இந்தியாவின் நடுத்தர மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வசதி, வாய்ப்புகளை வைத்துக் கொண்டு தரமான, சத்து நிறைந்த உணவுகளை வாங்கி உட்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியர்களின் இந்த உணவு முறை மாற்றம்தான் சர்வதேச அளவில் உருவாகியிருக்கும் உணவுப் பற்றாக்குறைகளுக்குக் காரணம். விலைவாசி உயர்வுக்கும் காரணம்!

யானை வரும் பின்னே; அதன் ஓசை வரும் முன்னே என்பது போல, இந்தியாவின் மீதான அமிலம் கலந்த வார்த்தை யுத்தத்தை ஜோர்ஜ் புஜ் தொடங்குவதற்கு முன்னரே, கருத்தரங்கு ஒன்றில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கொண்டலீஸாரைஸ், `உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனாவிலுள்ள மக்கள் அதிக அளவில் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதுதான் பொருட்களின் விலை உயர்வுக்கும் உணவுப் பற்றாக்குறைக்கும் காரணம்' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இவர் அமெரிக்க அரசு நிர்வாகத்தில் அதிபர் புஷ்ஷுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். இந்தியா மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

`உண்மையில், தங்கள் நாட்டில் கிடைக்கும் விவசாயப் பொருட்களில் பெரும்பாலானவற்றை உயிர்ம எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் அமெரிக்காவே உணவுப் பற்றாக்குறைக்கும் விலைவாசி உயர்வுக்கும் காரணம். ஆகவே, இந்தியாவின் மீதான புஷ்ஷின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது' என்று பதிலடி கொடுத்துள்ளனர் கம்யூனிஸ்டுகள்.

`தன்னுடைய விளைநிலங்களில் பெரும்பாலானவற்றை உயிர்ம எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் அமெரிக்காவே உணவுப் பற்றாக்குறையின் நிஜமான காரணகர்த்தா. தான் செய்யும் தவறை உணராமல் இந்தியா மீது புஷ் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு கொடூரமான நகைச்சுவை என்ற அளவிலேயே இந்தியா பார்க்கிறது' என்று கூறியிருக்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி. `அமெரிக்கா தான் உற்பத்தி செய்யும் சோளத்தில் மூன்றில் ஒரு பங்கை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது. அதிக அளவில் எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் வீட்டு உபயோகத்துக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது அமெரிக்கா. ஆனால், மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் விவசாயப் பொருட்கள் எதையும் இந்தியா உயிர்ம எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்துவதில்லை. ஆகவே, உணவுப் பற்றாக்குறைக்கு ஒருபோதும் இந்திய காரணம் அல்ல' என்று இந்தியா அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

`இந்தியா தன்னுடைய தேவைகளுக்காக உணவு இறக்குமதி செய்வதில்லை. மாறாக, உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆகவே, விலைவாசி உயர்வுக்கு இந்தியாவைக் காரணம் காட்டுவது தவறானது' என்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி.

இப்படி `ஜோர்ஜ் புஷ்ஷின் குற்றச்சாட்டுகளுக்கு, ஆளாளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க, பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் மானத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் விதமாக எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது வெட்கக்கேடானது' என்று சீறியிருக்கிறார் பா.ஜ.வின் முக்தர் அப்பாஸ் நக்வி.

இந்திய மற்றும் அமெரிக்க தலைவர்கள் இப்படி வார்த்தைகளால் மோதிக் கொண்டிருக்க, அமெரிக்க விவசாயத்துறை சார்பாக (food and Agricultural Organization) கடந்த ஆண்டு வெளியான ஆய்வு அறிக்கை அதிபர் புஷ்ஷுக்கு எதிரான பூமராங்காக உருமாற்றம் அடைந்திருக்கிறது. ஓர் ஆண்டில் அமெரிக்கர் மற்றும் இந்தியர் எந்த அளவுக்கு உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதை விளக்குகிறது அந்த ஆய்வறிக்கை.

கோதுமை, அரிசி, பார்லி, பால், இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை இந்தியர்களை விட ஐந்து மடங்கு அதிகமாக அமெரிக்கர்கள் சாப்பிடுகின்றனர் என்று சொல்லும் அந்த அறிக்கையில், ஒவ்வொரு பொருளையும் யார் யார், எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்று தனித்தனியாகப் பட்டியலே போட்டுள்ளனர்.

ஓர் ஆண்டில் ஓர் இந்தியர் 178 கிலோ உணவு தானியத்தைச் சாப்பிடுகிறார் என்றால் ஓர் அமெரிக்கரோ 1046 கிலோ உணவு தானியத்தைச் சாப்பிடுகிறார். இந்தியர் ஒருவர் முப்பத்தாறு கிலோ பாலை உட்கொள்கிறார் என்றால் அமெரிக்கர் ஒருவர் எழுபத்தெட்டு கிலோ பாலை உட்கொள்கிறார்.

அமெரிக்கர் ஒருவர் பயன்படுத்தும் தாவர எண்ணெயின் அளவு நாற்பத்தொரு கிலோ. ஆனால், இந்தியர் ஒருவர் வெறும் பதினொரு கிலோ மட்டுமே பயன்படுத்துகிறார். நாற்பத்தைந்து கிலோ பன்றி இறைச்சியை அமெரிக்கர் பயன்படுத்த, இந்தியரோ வெறும் இரண்டு கிலோ மாத்திரமே பயன்படுத்துகிறார்.

உணவுப் பற்றாக்குறை என்பது சர்வதேச அளவில் எழுந்திருக்கும் பிரதான பிரச்சினை, கவலையளிக்கக்கூடியது, கவனம் செலுத்த வேண்டிய விடயம் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்கு நிஜமான காரணம் என்ன என்பதைப் பற்றித்தான் பேச வேண்டுமே தவிர, ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சாட்டுவதில் பலனில்லை.

தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விவசாயத்துறை கொடுத்த ஆய்வு முடிவுகளையே சரியாகப் பார்க்காமல் அல்லது சரியாகப் பார்த்துவிட்டதால் அதை கவனமாக மறைத்துவிட்டு அறிக்கை விடுவது ஆபத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம். அதைத்தான் வலிய வந்து செய்திருக்கிறார் ஜார்ஜ் புஷ்! அது சரி, நெல்சன் மண்டேலாவையே தீவிரவாதிகள் பட்டியலில் வைத்திருக்கும் அமெரிக்காவின் அதிபர் வேறு எப்படித்தான் பேசுவார்?

Email this page Your Opinion Print this page
மன்னார் கரையோரத்தை கைப்பற்ற படையினர் திட்டம்
ஊடகங்களுக்கு எதிராக அரசு தொடுத்துள்ள யுத்தம்!
ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்க வேலைத் திட்டம்
மியன்மாரில் கோரத்தாண்டவமாடிய நர்க்கீஸ் சூறாவளியும் உலக சந்தையில் அரிசியின் தட்டுப்பாடும்?
பாராளுமன்ம் திடீர் ஒத்திவைப்பு பின்னணிக் காரணம் என்ன?
சட்டப் பேரவைத் தீர்மானம்: கலைஞர் சொன்னது என்ன?
இந்தியர்கள் சாப்பாட்டு ராமன்களா? உருவாக்கிய சர்ச்சை
கொசோவோவின் சுதந்திரம் உண்மையான சுதந்திரமா?
போர் நிறுத்தத்தை விரும்பாத தேர்தல் முடிவுகள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com