Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
சட்டப் பேரவைத் தீர்மானம்: கலைஞர் சொன்னது என்ன?
[11 - May - 2008] [Font Size - A - A - A]
"இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால், பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டுவிட்டது. அதற்கு காரணம், அதைக் கூறியது தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

இந்தியா தலையிட்டு இரண்டு பிரிவினரையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர வேண்டும்" என்ற தீர்மானத்தை கொண்டு அந்த கலைஞர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், போகிற போக்கில் அவர் சொல்லி விட்டுப் போயிருக்கும் சில வார்த்தைகள் ஈழத் தமிழர்களை புண்படுத்திவிட்டன என்பது தான் இங்கே வருந்தத்தக்க விடயம்.

அவர் சொன்னது இதுதான். "ஒரு குழுவாக அவர்கள் இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளை போல விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்தப் போராட்டம் பலவீனமாகிவிட்டது. இன்று அவர்களுக்கு பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கிறது. இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் மோதும் போக்கை கடைப்பிடித்தது. தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள்.

அங்கு ம.பொ.சி. போன்று இருந்த அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு அழைக்கப்பட்டு சிற்றுண்டி வழங்கி தேநீர் எடுத்து வர அவரது மனைவி மங்கையற்கரசி சென்று வருவதற்குள் கணவரும் உடனிருந்த தோழர்களும் பிணமாகக் கிடந்தார்கள். போராளிகளே அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு போராட்டத்தை பலவீனமாக்கி விட்டார்கள்.

இதுதான் கலைஞர் சொன்னது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

நேபாளத்தில் நடந்தது அங்கே உள்ள அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம். பல நாட்டுக்குள்ளேயே நடந்த பிரச்சினை அது. இலங்கைத் தீவில் நடப்பது ஒரு தேசிய இனம் தன்னை அடக்குகின்ற ஒரு நாட்டிடம் இருந்து விடுதலையாகும் போராட்டம். இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராட்டம். இரண்டு தேசிய இனங்களுக்கு (தமிழர், சிங்கள) இடையிலான போராட்டம்.

ஒரு தேசிய இனம் இன்னொரு நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு போராடுகின்ற போது, குழுக்களாக போராடி வெற்றி பெற முடியாது. அப்படி வெற்றிபெற்ற வரலாறும் உலகத்தில் வெகு வெகு குறைவு. அந்த வெற்றிகளும் தற்காலிகமான வெற்றிகளாக போனதையும் வரலாறு எமக்கு சொல்லித் தந்திருக்கிறது.

நேபாளத்தைப் போன்று ஒரு நாட்டுக்குள்ளேயே ஆட்சி மற்றும் அரசு மாற்றத்திற்கு போராடுகின்ற மக்கள் எத்தனை ஆயிரம் குழுக்களாக வேண்டுமென்றாலும் போராட முடியும். ஆனால், ஒரு பெரும்பான்மை இனத்திடம் இருந்து விடுதலை பெறப்போராடும் ஒரு இனம் அப்படிப் போராட முடியாது. நேபாளத்தை ஈழத்துடன் ஒப்பிடுவது மிகத் தவறான ஒன்று.

போராளிக் குழுக்களுக்குள் நடந்த மோதல்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிட்டன என்றும் கலைஞர் சொல்கிறார். இதை அவர் அன்றும் சொன்னார், இன்றும் சொல்கிறார். இப்படி ஒரு கருத்து உண்மையிலேயே அவருடைய மனதில் ஆழப்பதிந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால், இங்கே ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இந்திரா காந்தியின் பிரத்தியேகச் செயலாளராக இருந்தவர் இந்திராகாந்தி குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். இந்திராகாந்தி விடுதலைப்புலிகள் குறித்து கொண்டிருந்த கருத்து அந்த நூலில் கூறப்படுகிறது. `ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும், கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியாவின் அழுத்தத்திற்கு விடுதலைப்புலிகள் பணியமாட்டார்கள். ஏனென்றால், விடுதலைப்புலிகள் இயக்கம் தன்னுடைய இலட்சியத்தில் உறுதிகொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. அவர்களின் வளர்ச்சியை நாம் தடுக்க வேண்டும்" இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கருத்து இங்கே இந்திராகாந்தியின் கருத்தாக வெளிப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கோடு பல போராளிக் குழுக்களை அன்றைக்கு உருவாக்கியது இந்தியா தான். இந்தப் போராளிக் குழுக்களை விடுதலைப்புலிகளோடு மோதுவதற்கு தூண்டியதும், இந்தியாதான். கலைஞரும் அன்றைக்கு ரெலோ இயக்கத்திற்கு ஆதரவாக நின்று போராளிக் குழுக்களின் மோதல்களுக்கு ஏதோ ஒரு வகையில் துணை போனார் என்பதும் வரலாற்றில் உள்ள ஒரு செய்தி.

இந்தியாவின் திட்டப்படி பல போராளிக் குழுக்கள் வளர்ச்சி பெற்று, விடுதலைப்புலிகளை இல்லாது ஒழித்து, கடைசியில் இந்தியா காட்டுகின்ற இடத்தில் கையெழுத்தைப் போட்டுவிட்டு, அப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டமும் முடிவுறுவதானது கலைஞரின் விருப்பமாக இருக்காது என்று நாம் நம்புகிறோம். போராட்டத்தை திசைதிருப்பிய மற்றைய போராளிக் குழுக்களை விடுதலைப்புலிகள் அடக்கி வைத்ததாற்தான் தமிழீழ போராட்டம் இன்று வரை தக்கவைக்கப்பட்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கலைஞர் இன்னும் ஒரு குற்றச்சாட்டையும் சொல்லியிருக்கிறார். அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது பற்றிய விடயத்தை பேசியிருக்கிறார். தற்பொழுது இதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. தமிழ்ச்செல்வனுக்கு அழுத என்னுடைய மனம் அமிர்தலிங்கத்திற்கும் அழுகிறது என்ற செய்தியை சொல்லி தன்னை நடுநிலையாளராக காட்ட கலைஞர் முனைகிறார் என்பது புரிகிறது.

ஆகவே, கலைஞர் தமிழீழப் போராட்டம் பற்றி கூறிய விடயங்கள் சரியானவை அல்ல. அவர் கூறிய விடயங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட வேண்டியது இந்திய அரசும் அதன் உளவுத்துறையும் தான். இனியாவது இந்திய அரசு முன்பு விட்ட தவறுகளை மீண்டும் செய்யாது இருக்க வேண்டும். அதற்கு கலைஞர் தன்னால் ஆனதை செய்வார் என்று நம்புவோம்.

(வெப் ஈழம்)

Email this page Your Opinion Print this page
மன்னார் கரையோரத்தை கைப்பற்ற படையினர் திட்டம்
ஊடகங்களுக்கு எதிராக அரசு தொடுத்துள்ள யுத்தம்!
ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்க வேலைத் திட்டம்
மியன்மாரில் கோரத்தாண்டவமாடிய நர்க்கீஸ் சூறாவளியும் உலக சந்தையில் அரிசியின் தட்டுப்பாடும்?
பாராளுமன்ம் திடீர் ஒத்திவைப்பு பின்னணிக் காரணம் என்ன?
சட்டப் பேரவைத் தீர்மானம்: கலைஞர் சொன்னது என்ன?
இந்தியர்கள் சாப்பாட்டு ராமன்களா? உருவாக்கிய சர்ச்சை
கொசோவோவின் சுதந்திரம் உண்மையான சுதந்திரமா?
போர் நிறுத்தத்தை விரும்பாத தேர்தல் முடிவுகள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com