Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஊடகங்களுக்கு எதிராக அரசு தொடுத்துள்ள யுத்தம்!
[11 - May - 2008] [Font Size - A - A - A]
அஜாதசத்ரு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கம் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான பாரியதொரு இனவாத யுத்தத்தை தீவிரமாக முன்னெடுத்து அதற்கு ஊடாக தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துவரும் அதேவேளையில் உண்மை நிலைவரங்கள் வெளியேவரக்கூடாது என்பதற்கான ஊடக சுதந்திரத்திற்கு எதிரான பாரியதொரு யுத்தத்தை மறுபுறத்தில் நடத்தி வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

1990 ஆம் ஆண்டு நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாசாவினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல், படுகொலை, அராஜகம் போன்ற மிகமோசமான காட்டு மிராண்டித்தனமான அநாகரிகமற்ற சம்பவங்கள் இன்றைய ஆட்சிக் காலத்தின் போது உச்சக்கட்ட நிலைமையில் உள்ளதையே தொடரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.

1989- 1990 காலப் பகுதியில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யினால் இலங்கை- இந்திய ஒப்பந்தம் ஊடாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து `தேசப்பிரேமி' என்ற பெயரில் தென்னிலங்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், நாசகாரச்செயல்கள் என்பவற்றை கட்டுப்படுத்த அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை கையாண்டனர்.

தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் `தேசப்பிரேமி' என்ற பெயரில் இயங்கிய ஜே.வி.பி. உறுப்பினர்கள் அரசுக்கு சொந்தமான வாகனங்கள், தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு வளங்களை தீயிட்டு எரித்து நாசப்படுத்தியதுடன் பொதுமக்களின் அடையாள அட்டைகளை பறித்தெடுத்தும் முப்படையினரை தாக்கியழித்தும் வந்தனர்.

ஜே.வி.பி.யினரின் இந்த வன்முறைப் போக்குகளை இல்லாதொழிக்க அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் அரசாங்கம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

ஜே.வி.பி. உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரும் விசாரணை எதுவுமின்றி கொன்றொழிக்கப்பட்டார்கள். வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் வெட்டியும் சுட்டும் கங்கைகளில் நிர்வாணமாக போடப்பட்டும் தென்னிலங்கையைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

தென்னிலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான இந்த மனித உரிமை மீறல் சம்பவங்களை துணிச்சலுடன் சர்வதேச சமூகத்தின் முன்பாக வெளிக்கொணர்ந்தமைக்காகவே ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி.சொய்சா அவரது ராஜகிரியவிலுள்ள வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டு மொரட்டுவ கடற்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி.சொய்சா மீதான படுகொலைச் சம்பவத்தை அன்றைய காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிக வன்மையாகக் கண்டித்ததுடன் அப்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர்.

அதுமட்டுமன்றி அன்றைய கால கட்டத்தில் இடம்பெற்ற கடத்தல், கைது, காணாமல்போதல், சித்திரவதை, படுகொலை போன்ற சம்பவங்களை நிறுத்துமாறு கோரி கதிர்காமம் உட்பட பல்வேறு வணக்க ஸ்தலங்களில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலேயே என்றுமில்லாதளவிற்கு மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களும் ஊடக சுதந்திரத்தை நசுக்கி ஒடுக்கும் பாரதூரமான சம்பவங்களும் மிகப் பெருமளவில் நடைபெற்றுவருதைக் காணக்கூடியதாகவுள்ளது.

1990களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவினால் தொடங்கிவைக்கப்பட்ட ஊடகத்துறையினருக்கு எதிரான பாரிய அச்சுறுத்தல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் பலரை பலியெடுத்ததுடன் ஊடக தணிக்கையும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டு மக்கள் உண்மை நிலைவரங்களை அறிய முடியாதளவிற்கு கருத்துச் சுதந்திரம் தடைசெய்யப்பட்டது.

அவ்வாறானதோர் மிக மோசமான பாரிய அச்சுறுத்தலையே இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் ஊடகத்துறையினர் எதிர்கொண்டுள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் அனைத்துச் சுதந்திரத்திற்கும் அடிப்படையானதோர் அம்சம் என்ற உண்மைத்தன்மையை அதிகாரத்திலிருப்பவர்கள் மறந்துவிடுவதாலேயே இந்த மோசமான நிலைமையேற்பட்டாலும் என்றோ ஒருநாள் அதன் வெளிப்படைத் தன்மையை உணரும் காலம் வெளிவரும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவினால் தொடக்கிவைக்கப்பட்ட ஊடகத்துறையினர் மீதான படுகொலைக் கலாசாரம் இதுவரை 14 பேரை பலிகொண்டுள்ளது.

1990 இல் ரிச்சர்ட் டி.சொய்சா, அதனைத் தொடர்ந்து கல்முனை பாண்டிருப்பில் பிரதேச ஊடகவியலாளர் செழியன் ஜே.பேரின்பநாயகம், யாழ்ப்பாணம் `ஈழநாடு' பத்திரிகையில் பணியாற்றிய ஜ.சண்முகலிங்கம், லேக்ஹவுஸ் பத்திரிகையாளர் எம்.செல்வராஜா, சுதந்திர ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், யாழ். தினக்குரல் நிருபர் எஸ்.ராமச்சந்திரன், கொக்குவிலில் வைத்து பயிற்சிப் பத்திரிகையாளர் நிலக்ஷன், கொழும்பு ஜாவத்தை வீதியில் வைத்து சரிநிகர் ஊடகவியலாளர் எஸ்.குகமூர்த்தி, கொழும்பு காலிமுகத்திடலில் கே.எஸ்.ராஜா, கொழும்பு வெள்ளவத்தையில் தினமுரசு ஆசிரியர் நடராஜா அற்புதராஜா (ரமேஷ்), வவுனியாவில் வானம்பாடி ஒலிபரப்பு நிருபர் அன்ரனி மரியதாஸ், மட்டக்களப்பில் எஸ்.நடேசன், கொழும்பில் தராக்கி என்றழைக்கப்படும் எஸ்.சிவராம், சட்டன ஆசிரியர் ரோஹணகுமார, தெகிவளையில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மல் உட்பட பலர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதுடன் பலரின் நிலைமை இதுவரை தெரியவில்லை.

இதனைவிட கடந்த காலங்களில் 8 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நான்கு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர். இவர்களில் இருவர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் உள்ளனர். ஐந்து அலைவரிசைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு இணையத்தளத்திற்கு தடைவிதிப்பு, மூன்று பத்திரிகைகள் மீது அடக்குமுறை பிரயோகம், மூன்று ஊடகங்கள் மீது அடக்குமுறை சட்டப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைவிட கடந்த காலங்களில் கடமை நிமித்தம் சென்ற பல ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்களும் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி அதிஉயர் பாதுகாப்பு வலயப்பிரதேசத்திற்குள் அமைந்துள்ள `சண்டே லீடர்' அலுவலகம் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் முற்றுகையிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு நீதியான விசாரணையும் இடம்பெறவில்லை.

இவ்வாறே கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல்போன எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் அரசு எந்தவொரு உதவியையும் வழங்கவுமில்லை, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவுமில்லை என்பதும் கவலை தரும் விடயமாகும்.

ஊடகத்துறையினர் மீதான இந்த வன்முறை யுத்தத்தை ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்கள் மாத்திரமன்றி தமிழ் இயக்கங்கள், ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) போன்ற அமைப்புகளும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மாநாடு மற்றும் ஆர்ப்பாட்டக் கூட்டங்களுக்கு செல்லும் தமிழ் ஊடகவியலாளர்கள் இனப்பாரபட்சமாக நடத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியொன்று தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற சுடர்ஒளி பத்திரிகையாளர் ஒருவர் ஜே.வி.பி. உறுப்பினர்களால் மிக மோசமாக தாக்கப்பட்டு பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்ட அநாகரிகமற்ற சம்பவமும் இடம்பெற்றது கவனிக்கத்தக்கது.

இதனைவிட அரச கட்டுப்பாட்டிலுள்ள பிரதான ஊடகமான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அமைச்சர் மேர்வின் சில்வா உயரதிகாரிகளை தாக்கிய சம்பவத்தால் ஆத்திரமுற்ற அங்கிருந்த ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் மேர்வின் சில்வா மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஊழியர் உட்பட நான்கு பேர் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தனர். மேலும், பலர் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதுடன் 20க்கும் மேற்பட்டோர் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்குள்ளாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலர் உள்ளக இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர்.

ஆனால், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன் அதற்கு பின்னர் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அமைச்சர் மேர்வின் சில்வா மீது அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

ஊடக சுதந்திரத்திற்கு எதிரான மிகக்கடுமையான யுத்தமொன்றை முன்னெடுக்கும் நாடாக இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் செயற்படுவதையே தொடரும் ஒவ்வொரு சம்பவங்களும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

Email this page Your Opinion Print this page
மன்னார் கரையோரத்தை கைப்பற்ற படையினர் திட்டம்
ஊடகங்களுக்கு எதிராக அரசு தொடுத்துள்ள யுத்தம்!
ஆங்கில மொழி ஆற்றலை அதிகரிக்க வேலைத் திட்டம்
மியன்மாரில் கோரத்தாண்டவமாடிய நர்க்கீஸ் சூறாவளியும் உலக சந்தையில் அரிசியின் தட்டுப்பாடும்?
பாராளுமன்ம் திடீர் ஒத்திவைப்பு பின்னணிக் காரணம் என்ன?
சட்டப் பேரவைத் தீர்மானம்: கலைஞர் சொன்னது என்ன?
இந்தியர்கள் சாப்பாட்டு ராமன்களா? உருவாக்கிய சர்ச்சை
கொசோவோவின் சுதந்திரம் உண்மையான சுதந்திரமா?
போர் நிறுத்தத்தை விரும்பாத தேர்தல் முடிவுகள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com