Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
வேலியே பயிரை மேயாமல் பார்ப்பதே இன்றைய தேவை
[11 - May - 2008] [Font Size - A - A - A]
மனித உரிமை மீறல்கள் இலங்கையில் வகைதொகையின்றி அதிகரித்துச் செல்வது தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மனித உரிமைப் பணியாளர்கள் கடும் விசனங்களை தெரிவித்து வரும் நிலையில் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சானது 24 மணிநேரமும் உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கக்கூடிய பிரிவொன்றை உருவாக்கியிருப்பது சிறிது ஆறுதலளிக்கக்கூடிய விடயமாகும். ஆனால், இந்தப் பிரிவு செயற்பட ஆரம்பித்து மூன்று நாட்களுக்குள் 59 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக இந்தப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் நவரட்ண ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்ததாக நேற்று வெளிவந்த செய்தியானது உண்மையிலேயே கவலையையும் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியையும் தோற்றுவிப்பதாக உள்ளது.

மூன்று தினங்களில் தெரிவிக்கப்பட்ட 59 புகார்களில் 2 முறைப்பாடுகள் தொடர்பாக இந்த உடனடித் தொடர்பை ஏற்படுத்தும் பிரிவானது கண்டறிந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தத் தொடர்பாடல் பிரிவுக்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கைதுகள், தடுத்துவைத்தல், கடத்தல்கள், காணாமற்போதல்கள் தொடர்பான தகவல்களை மக்கள் தற்போது பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் விவகார அமைச்சின் ஊடகப் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் சரத்லால் குமார கூறியுள்ளார். அரச தரப்பினரால் கைது செய்யப்பட்டதாகக் கருதப்படும் அல்லது தடுத்துவைக்கப்பட்டதாகக் கருதப்படும் அல்லது கடத்தப்பட்டு காணாமற்போயிருப்பதாகக் கருதப்படும் நபர்கள் தொடர்பாக அவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கவலைகளுக்கு இந்த நேரடி தொலைபேசித் தொடர்பாடல் மூலமான முறைப்பாடுகள் மூலம் பரிகாரம் காணமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அன்புக்குரியவர்கள் கடத்தப்பட்டு காணாமற்போயிருப்பதாக உறவினர்கள் முறையிட்டுள்ளதாக ஏறக்குறைய தினந்தோறும் ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இவ்வாறு கடத்தப்பட்டு காணாமற்போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் சமூகத்தவர்களாகவே உள்ளனர். இந்நிலையில் அமைச்சு உருவாக்கியிருக்கும் விசேட தகவல் நிலையத்தினூடாக விசாரணை நடத்தி கடத்தப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்களென்ற விபரத்தை அறிவிக்கக்கூடியதாக இருக்குமென மேஜர் நவரட்ண நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதுவரை இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் இந்த தகவல் நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல், காணாமற்போதல் தொடர்பான பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்து எதிர்வரும் காலங்களில் அத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் தடுத்துநிறுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடப்பாடுமாகும். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மோசமான பதிவுகளால் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தொடர்ந்தும் உறுப்பினராக இருப்பதற்கு இலங்கைக்கு இடமளிக்கக்கூடாதென சுதந்திர இல்லம், ஐ.நா. கண்காணிப்பகம் மற்றும் 20 அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு என்பன இந்த வாரம் வலியுறுத்தியிருந்தன. மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள் மோசமாக இருப்பதாகவும் உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக அளித்த உறுதிமொழியை கொழும்பு நிறைவேற்றத்தவறிவிட்டதாகவும் இந்த அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. எதிர்வரும் 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஆசிய நாடுகளுக்கான பட்டியலில் இலங்கை, பாகிஸ்தானுக்கான உறுப்புரிமை மீண்டும் கிடைப்பது அசாத்தியமென கருதப்படுகிறது.

மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் சர்வதேசத்தின் குறிப்பாக மேற்குலகின் கடும் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் நிலையில் நிலமையை சீர்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு உள்ளது. தற்போதைய கள நிலைவரங்களை கருத்திற்கொண்டே மனித உரிமைகள் விவகார அமைச்சு தகவல் நிலையமொன்றை சடுதியாக அமைத்திருப்பதாக தோன்றினாலும் பாதிக்கப்பட்டோருக்கு இது சிறிதளவாவது ஆறுதலளிக்கும் விடயமாகும். எது எவ்வாறாயினும் சட்டத்தை உருவாக்குவோரே அவற்றை மீறிச்செயற்படுவது பரவலாக இடம்பெறுவதாலேயே பாரியளவில் உரிமை மீறல்கள், துஷ்பிரயோக நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நீதி விசாரணைக்கு புறம்பான படுகொலைகள், பலாத்காரமாக கடத்தப்பட்டு காணாமற்போதலுடன் சம்பந்தப்பட்டோரை சிறப்புரிமையடிப்படையில் பாதுகாக்க முற்படாமல் நெறி முறையாக விசாரணை நடத்தி சட்டத்தின் முன்நிறுத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமே மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும். அதேசமயம், குற்றமிழைப்போரும் தண்டனைக்கு அஞ்சி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

அரசியல் ஆதாயத்துக்காக மோசமான சட்டவிரோத செயற்பாடுகளில் கூட அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பதாலேயே பிரச்சினைகள் பூதாகரமாக்கிவிடுவதுடன் கடிவாளமிட முடியாமல் கட்டுப்பாட்டை மீறிச் செல்கின்றன. இந்த நிலைமையே தற்போது இலங்கையில் பரவலாக காணமுடிகிறது என்பதே உண்மை. வேலியே பயிரை மேயாமல் பார்த்துக்கொள்வதே உடனடித்தேவை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com