காத்மண்டு: நேபாளப் பிரதமரும், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலாவை மாவோயிஸ்ட் தலைவர்கள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
நேபாளத்தில் அண்மையில் நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட்டுகள் அதிக இடங்களைக் கைப்பற்றினர். எனினும், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் இழுபறி நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா மற்றும் அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினர். ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்தனர்.
`புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முதல் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக பிரதமருடன் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மே 25, அல்லது 29 ஆம் திகதிக்குள் மன்னராட்சி கலைக்கப்பட்டு விடும். இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒப்புதல் அளித்து விட்டனர்' என்று நேபாள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் சரண் தெரிவித்தார்.