எம்.ஏ.எம். நிலாம்
"பவ்ரல்" மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (சி.எம்.ஈ.வி) தவிர்ந்த ஏனைய தேர்தல் கண்காணிப்புக்குழுக்களும், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை அவதானிக்கவோ, செய்திகளைத் திரட்டவோ அங்கு செல்ல பாதுகாப்புத் தரப்பு அனுமதிக்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளரால் அனுமதி வழங்கப்பட்ட இரண்டு கண்காணிப்புக் குழுக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொண்டால் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டதாகவும், மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் செய்தி திரட்ட இடமளிக்கப்பட்டதோடு கொழும்பிலிருந்து சென்ற ஊடகவியலாளர்களும். வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரப்பணிகள் முடிவடைந்த 7ஆம் திகதி முதல் இந்த தடையை பாதுகாப்புத் தரப்பு மேற்கொண்டுள்ளது. சில கண்காணிப்புக்குழுக்களும், ஊடகங்களும் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டன.
எனினும், பிரதான ஊடகங்களின் உள்ளூர் செய்தியாளர்களும், கண்காணிப்பு நிலையங்களின் பிராந்திய கண்காணிப்பாளர்களும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் நேற்றைய தேர்தல் தொடர்பாக தகவல்களைத் திரட்டி உடனுக்குடன் கொழும்புக்கு கிடைக்கச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.