*கிழக்கு தேர்தல் ஐ.தே.கட்சி விசனம்
எம்.ஏ.எம். நிலாம் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எவ்வாறாக அமைகின்ற போதிலும் வாக்களிப்பில் பாரிய மோசடிகளும் வன்முறைகளும் இடம்பெற்றதாக கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக உரிமைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் களங்கம் வரலாற்றில் மீண்டுமொருதடவை அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்திருக்கின்றது.
மோசடிகளிலும் வன்முறையிலும் அரசாங்கம் நேரடியக சம்பந்தப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஐ.தே.க. இடம்பெற்ற முறைகேடுகள் மோசடிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் சட்ட விவகாரக்குழு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க , கண்டி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டனர்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளித்த திஸ்ஸ அத்தநாயக்க கூறியதாவது;
"அரசாங்கம் பகிரங்கமாகவே கிழக்குத் தேர்தலில் வாக்குக் கொள்ளையிலீடுபட்டது. அதிகாரம் படுமோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியிலேயே வன்முறைகளும் வாக்குக் கொள்ளையும் அதிகம் இடம்பெற்றன. மட்டக்களப்பில் முற்று முழுதான அடாவடித்தனமும் வாக்கு மேசடியும் தலை தூக்கியிருந்தது.
திருக்கோவில் வாக்களிப்பு நிலையம் பிள்ளையான் குழுவின் அதிகாரத்திலேயே காணப்பட்டது. ஏனைய கட்சிகளுக்கோ சுயேச்சைக் குழுக்களுக்கோ தமது முகவர்களைக் கூட நிறுத்த இடமளிக்கப்படவில்லை.
வெருகல் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்ற மோசடிகளை அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி கூட கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். மூன்று மாவட்டங்களிலும் அடாவடித்தனங்களும் வாக்கு மோசடிகளும் தலைவிரித்தாடியுள்ளன.
தெஹியத்தகண்டியில் ஆயுதங்களுடன் வந்த பிரதியமைச்சர் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு பத்து நிமிடங்களில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலிக்க சில்வாவும் குழுவொன்றும் அதே பகுதியில் கைது செய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
சபாநாயகரின் மகன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்
சபாநாயகரின் மகனும் அப்புத்தளை தொகுதி ஐ.தே.க. அமைப்பாளருமான உதித் லொக்குபண்டார தெஹியத்தகண்டியில் வைத்து சப்ரகமுவ மாகாண ஆளுநரால் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தப்பட்டதோடு உடனடியாக திரும்பிச் செல்லுமாறு விரட்டியுள்ளார். அந்த இடத்தில் மகியங்கனை எம்.பி.யான லக்ஷ்மன் செனவிரத்னவும் இருந்துள்ளார்.
இவைதவிர அமைச்சர் ரிஷாத்பதியுதீன், பிரதியமைச்சர் பாயிஸ் ஆகியோர் பாரிய வாக்கு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எந்த வகையிலிருந்த போதிலும் தேர்தல் முடிவுகள் எப்படியாக அமைந்த போதிலும் தேர்தல் நீதியாகவோ நியாயமாகவோ நடைபெறவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையாளருடன் பேசுவோம் அதேசமயம் சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்றார்.