*சுட்டிக் காட்டுகிறது மனித உரிமை கண்காணிப்பகம்
இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்ட கருணாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்வதில் பிரிட்டிஷ் அரசாங்கம் தோல்வி கண்டமையானது சந்தர்ப்பத்தை தவற விட்ட துன்பகரமான விடயமென மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மானுக்கு எதிராக இல்லையென அந்நாட்டு அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
பொன்னான சந்தர்ப்பத்தை பிரிட்டன் தவற விட்டுள்ளது. கருணா போன்ற மனித உரிமை மீறலில் சம்பந்தப்பட்டவரை பாரதூரமான துஷ்பிரயோகங்களுக்காக விசாரணைக்குட்படுத்தும் அருமையான வாய்ப்பை பிரிட்டன் நழுவவிட்டுள்ளது. மனித உரிமை துஷ் பிரயோகங்கள் எங்கு இடம்பெற்றாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். விசாரணையிலிருந்தும் அவர் (கருணா) நம்புவாராயின் அது அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சர்வதேச நீதித்துறைக்கும் பெரும் துன்பகரமான விடயமாக அமையுமெனவும் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.
சித்திரவதை, போர்க் குற்றங்கள் உட்பட பாரதூரமான உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் கீழ் தனிப்பட்ட நபர்களை விசாரணை செய்வதற்கு பிரிட்டிஷ் சட்டம் இடமளிக்கிறது.உதாரணமாக 2005 இல் ஆப்கானின் முன்னாள் தீவிரவாதக் குழுத் தலைவரான பர்யாதி சர்வார் சர்தத்தை சித்திரவதை, பணயக் கைதியாக சிறைப்பிடித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் பிரிட்டிஷ் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்திருந்தது.
பிரிட்டனிலிருந்து கருணாவை வெளியேற அனுமதிக்கு முன்னர் பொலிஸார் சமர்ப்பித்த ஆதாரம் குறித்து பிரிட்டிஷ் விசாரணையாளர்கள் மீண்டும் தீவிரமாக ஆராய வேண்டும் என்று அடம்ஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியேறினால் விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் ஆயத்தமாக இருக்க வேண்டும். அதனைத் தவற விட்டால் அவரின் அண்மைக்கால குற்றச்செயல்கள் தொடர்பாக பங்களிப்புச் செய்ததாகவே அது அமையுமெனவும் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.