மூதூரில் கால்நடை வள பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் தாக்குதல் நடத்த முயன்றவேளை விஷேட அதிரடிப் படையினர் தலையிட்டு அவரை மீட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே பிரதியமைச்சர் பாயிஸ் அங்கு சென்றிருந்தார்.
இவ்வேளையில் பிரதியமைச்சர் பாயிஸ் மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்தியதையடுத்து மாலை 6.45 மணியளவில் பிரதியமைச்சர் பாயிஸ் ஒளிந்திருந்த வீட்டின் முன் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன் அவரை வெளியே வருமாறும் கோஷமிட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதிலும் அவர்களினால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
நிலைமை மேலும் மோசமடையவே அங்கு விஷேட அதிரடிப் படையினர் விரைந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற விஷேட அதிரடிப் படையினர் பிரதியமைச்சர் பாயிஸை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இவ்வேளை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பாயிஸுக்கு எதிராக கோஷமிட்டதுடன் மேலும் சிலர் அவர்களை தாக்கவும் முயன்றுள்ளனர்.
எனினும் அங்கிருந்து பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு மத்தியில் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட போதும் பின்னர் அமைதி நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமை காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாயிஸ் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.