தேர்தல் மோசடி நடைபெற்ற வாக்களிப்பு நிலையங்களின் வாக்கு எண்ணும் பணியை உடனடியாக இடைநிறுத்தி அங்கு மீள் வாக்களிப்பை நடத்துமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தல்கள் ஆணையாளரை வலியுறுத்தியுள்ளது.
கிழக்கு தேர்தல் வாக்களிப்பில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் வன்முறைகளை ஆதாரத்துடன் அந்நிலையம் அம்பலப்படுத்தியிருக்கும் அதேவேளை, இதுபற்றி கருத்து தெரிவித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறுகையில்;
வாக்களிப்பில் மிகப்பாரதூரமான மோசடிச் சம்பவங்களும், வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. எனவே இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட வாக்களிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை இரத்துச்செய்து, அங்கு மீள் வாக்குப்பதிவை நடத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
வன்முறையற்ற, மோசடியற்ற தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் மோசடிகளும், வன்முறைகளும் மிக அதிகளவில் நடைபெற்றுள்ளமை துரதிர்ஷ்டவசமானது.
கொலை, காயப்படுத்துதல், அச்சுறுத்தல், கட்சி முகவர் பலாத்கார வெளியேற்றம், வாக்குத் திணிப்பு, வாக்கு அட்டைப் பறிப்பு ஆகியனவும் நடைபெற்றுள்ளன.
தம்பிலுவில் மத்திய கல்லூரி, தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், ஆகியவற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இவை உதாரணங்கள் மாத்திரமே.
பல அமைச்சர்களுக்கு மோசடிகளுடனும், வன்முறைகளுடனும் நேரடித் தொடர்புள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. என்றார் அத்துடன் இது பற்றிய விரிவான அறிக்கையை தயார் செய்வதாகவும் குறிப்பிட்டார்.