திருகோணமலைத் துறைமுகத்தினுள் நேற்று சனிக்கிழமை அதிகாலை படையினரின் விநியோகக் கப்பலொன்றை தாங்கள் தாக்கி மூழ்கடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
`எம்.வி.இன்வின்சிபிள்' (ஏ520) என்ற சரக்குக் கப்பலே நீருக்கடியிலான தாக்குதலொன்றில் சேதமடைந்து முழ்கியுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலைத் துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையில் நேற்று அதிகாலை 2.20 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் கூறுகையில்;
திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில், படையினரின் வழங்கல் கப்பலொன்று நேற்று அதிகாலை தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
படையினரையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்லக்கூடிய சுமார் 80 மீற்றர் நீளமான இந்தக் கப்பல், யாழ்.குடாநாட்டுப் படையினருக்கான வெடிபொருட்களை ஏற்றியிருந்த வேளையிலேயே, கடற்புலிகளின் கங்கை அமரன் நீரடிநீச்சல் பிரிவின் கடற்கரும்புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கும், காங்கேசன் துறையிலிருந்து கொழும்புக்கும் இடையில் படையினருக்கான ஆயுதத் தளபாடங்களையும் வெடிபொருட்களையும் ஏற்றி இறக்கும் பணியில் இந்தக் கப்பல் ஈடுபட்டு வந்தது.
2007 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் கப்பல்களை தாக்கியழிக்கும் முழுமையான நடவடிக்கையிலும் இந்தக் கப்பல் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி கடற்படையினர் கூறுகையில்;
திருகோணமலைத் துறைமுகத்தில் அஷ்ரப் இறங்கு துறையில் நிறுத்தப்பட்டிருந்த எம்.வி.இன்வின்சிபிள் (ஏ.520) என்ற கப்பல் அதிகாலை 2.15 மணியளவில் நீருக்கடியிலான குண்டுவெடிப்பில் பலத்த சேதமடைந்து பின்னர் கடலினுள் மூழ்கியது.
இதனால் எவருக்கும் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை.
1970 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வர்த்தகக் கப்பல் 2003 ஆம் ஆண்டு 254 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் தங்காலைக் கடற்பரப்பினுள் நுழைந்தபோது கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், இந்தத் தாக்குலையடுத்து திருகோணமலைக் கடற்பரப்பில் கற்படையினர் தங்கள் கண்காணிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், தேடுதல்களையும் நடத்தி வருகின்றனர்.