சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹொக்கி அணி பங்குபற்றும் தகுதியை இழந்ததனால் இந்திய ஹொக்கி கூட்டமைப்பை இந்திய ஒலிம்பிக் நிர்வாகம் கலைத்து விட்டு, ஹொக்கி நிர்வாகத்தை நிர்வாகிப்பதற்கு சிறப்பு கமிஷன் ஒன்றை நியமித்துள்ளது.
சிறப்பு கமிஷனின் புதிய தெரிவுக்குழுத் தலைவரும் முன்னாள் வீரருமான அஸ்லாம் ஷேர்கான் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னாள் தெரிவுக் குழுவின் செயலாளரும் தலைவரும் லட்சம் பெற்று வீரர்களை அணியில் இணைத்துக் கொண்டதனாலேயே, இந்திய ஹொக்கி அணி பலவீனம் அடைந்து பல தோல்விகளை சந்தித்தது. சிறந்த வீரர்கள் இருந்தும் அணியில் இடம்பெறாதது துரதிர்ஷ்ட சம்பவம்தான்.
தற்போதைய எமது புதிய தெரிவுக்குழுவில் முன்னாள் வீரர்களான தன்ராஜ்பிள்ளை, ஜாபர் இக்பால், அஜித் பால்சிங், அசோக்குமார் ஆகியோர் அங்கம் வகிக்கின்றார்கள். இதனால் இந்திய ஹொக்கி அணி துரித வளர்ச்சியை அடைந்துவிடும் என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறந்த வீரர்களையும் முன்னாள் நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்பட்ட சிறந்த வீரர்களையும் தெரிவு செய்து, பலம்வாய்ந்த ஹொக்கி அணியை உருவாக்கவுள்ளோம். இந்திய ஹொக்கி தெரிவுக்குழுவில் முன்னாள் வீரர்கள் இடம்பெறுவது இதுதான் முதல்தடவை.
சென்னை, லக்னோ, ஐலந்தா ஆகிய இடங்களில் பலவீனம் அடைந்துள்ள ஹொக்கி விளையாட்டை அபிவிருத்தி செய்வதுடன் சர்வதேச தரத்திலான ஹொக்கிப் போட்டிகளை மீண்டும் இந்தியாவில் நடாத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அஸ்லாம் ஷேர்கான் தெரிவித்தார்.