|
க.தே.தாசன்
ஜேர்மனியின் வட மாநிலத்தில் டோட்முண்ட் நகரம் அமைந்துள்ளது. அந்நகரத்தில் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை தமிழ்மொழி வளர்ச்சியில் அயராது தொழிற்பட்டு வருகின்றது. வள்ளுவர் தமிழ்ப்பாடசாலை வருடாந்தம் திருக்குறள் மனனப் போட்டிகளை நடாத்தி வருகின்றது. இந்த வகையில் அண்மையில் திருக்குறள் மனனப் போட்டிகளை நடாத்தி மாணவர்களினதும் பெற்றோர்களினதும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. திருக்குறள் மனனப் போட்டி வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் பொறுப்பாசிரியர் பொ.சிறிஜீவகன் தலைமையில் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு தமிழ்ப் பாடசாலைகளின் மாணவர்களும், தனிப்பட்ட மாணவர்களும் பங்குபற்றினர். போட்டியின் நடுவர்களாகக் கவிஞர் அ.புவனேந்திரன், மண் சஞ்சிகை ஆசிரியர் வ.சிவராசா, எழுத்தாளர் சங்கச் செயலாளர் க.அருந்தவராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டி நிகழ்ச்சிகள் குத்துவிளக்கு ஏற்றும் வைபவத்துடன் ஆரம்பமாகின. பாடசாலையின் பெற்றோர்கள் திருமதி பரமேஸ்வரி சண்முகதாசன், திருமதி சாந்தகுமாரி சிவராஜா ஆகியோர் குத்துவிளக்கினை ஏற்றிவைத்தனர். இனம், மொழி, கலை, கலாசாரம், பண்பாடுகள் என்பவற்றின் வளர்ச்சிக்காகவும், விடுதலைக்காகவும் தம்முயிர்களைத் தியாகம் செய்த யாவருக்குமாக மௌன வணக்கம் செலுத்தப்பட்டது.
வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் தமிழ் வாழ்த்தினை பாடினர். வரவேற்புரையை பாடசாலையின் ஆசிரியை திருமதி.கிளி நிகழ்த்தினார். அவர் தமது வரவேற்புரையில் எமது வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை நடாத்தும் திருக்குறள் மனனப் போட்டி, எமது பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமன்றி மற்றப் பாடசாலை மாணவர்களும் தனிப்பட்ட மாணவர்களும் பங்குபற்றிப் பயனடையும் வகையில் நடாத்துகின்றோம். இவ்வாறான செயற்பாட்டுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து ஒத்துழைக்கும் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துகிறோம். இப்போட்டியில் பங்கு பற்றுவதற்காக வந்துள்ள மாணவர்களையும் மாணவர்களைத் தயார்படுத்திப் போட்டியில் பங்குபற்றுவதற்காக அழைத்து வந்திருக்கும் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மிகுந்த மகிழ்வுடன் வரவேற்றுக் கொள்கிறோம். மேலும், இப்போட்டி நிகழ்வுக்கு நடுநிலை வகிக்க வந்திருக்கும் நடுவர்களை நாம் யாவரும் பெரும் நன்றியுணர்வுடன் வரவேற்றுக் கொள்கிறோம் என தனது வரவேற்புரையில் கூறினார்.
பாடசாலையின் பொறுப்பாசிரியர் பொ.சிறீஜீவகன் தலைமையுரை நிகழ்த்தினார். இன்று பல்வேறு நகரங்களில் அமைந்திருக்கும் பாடசாலைகள், பொதுநிறுவனங்கள் மூலம் திருக்குறள் போட்டிகளையும், பேச்சுப் போட்டிகளையும் நடாத்தி வருகின்றோம். இப்போட்டிகளில் மாணவர்கள் பங்குபற்றுவதன் மூலம் மாணவர்கள் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். கூச்சம், மனப்பயம், அச்சம் என்பனவற்றிலிருந்து விடுபட்டுக் கொள்கின்றனர். சொல்வளத்தையும், பேச்சாற்றலையும், நற்கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்கின்றனர். வாழ்க்கையின் நல்வாழ்வதற்கான நற்சிந்தனைகளையும், நற்பழக்க வழக்கங்களையும் பெற்றுக் கொள்கின்றனர். நாம் இன்று மேடைகளில் பேசுகின்றோம், நன்நடத்தையில் வாழ்கின்றோம் என்றால் அதற்குக் காரணமாக இருப்பவை நாம் சிறுவயதில் இவ்வாறான போட்டிகளில் பங்குபற்றியமையும், பாடசாலைகளில் பாடமாக்கிய விடயங்களும் தான். சிறுவயதில் நாம் பாடமாக்கிய விடயங்களின் தன்மைகளும், பொருள்களும் எமக்கு தெளிவாக விளங்கவில்லை.
ஆனால் எமது ஆசிரியர்களின் வழிகாட்டுதலிலும், பெற்றோரின் ஊக்குவிப்பிலும் பாடமாக்கினோம். வயது வரவர பாடமாக்கிய திருக்குறள், பாட்டுக்கள், நீதிக்கருத்துக்கள் என்பவற்றின் பொருள்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெற்றுக் கொண்டோம். அவற்றை மனதில் கொண்டு பெற்றோர்களாகிய நாம் இன்று மேடைகளில் பேசுகின்றோம், விளக்கவுரைகள் செய்கின்றோம் இதே போல் இம் மாணவர்களும் எதிர்காலத்தில் மேடைப் பேச்சாளர்களாகவோ! எழுத்தாளர்களாகவோ! வேறு துறைகளிலோ! சிறப்புப் பெற்று விளங்குவார்கள். அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டும் வண்ணம் திருக்குறள் விளங்குகின்றது. திருக்குறளைத் தெரியப்படுத்திக் கற்கச் செய்வது நமது பொறுப்பாகும் என்று கூறியதோடு போட்டி விதிமுறைகளையும், புள்ளியிடும் முறைகளையும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் ஆறு வயது மாணவர்கள் தொடக்கம் பத்தொன்பது வயது மாணவர்கள் வரை ஏழு பிரிவாகப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் யாவும் மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடைபெற்றன. போட்டிகளின் முடிவில் நடுவர்களின் கருத்துரைகள் இடம் பெற்றன. நடுவர் போட்டியின் போது மாணவர்களிடம் கண்ட சிறப்புக்களையும், தவிர்க்கப்பட வேண்டிய குறைகளையும் எடுத்துக் கூறினர்.
சிவராசா திருக்குறள் வாழ்வியலுக்கான ஒரு நூல். வாழ்விற்குரிய வழிகாட்டும் கருத்துக்களைக் கொண்டுள்ளது. யாவரும் சிறுவயதிலிருந்தே திருக்குறளைக் கற்றுப் பயன்பெற வேண்டும். அதனால் பெரும் சிறப்புப் பெறலாம். போட்டிக்காகப் பாடமாக்கி வந்து சொல்லிவிட்டு ஓடுவதாக இருக்கக் கூடாது. சிலர் அவசரமாக சொன்னார்கள். இதனால் சொல் உச்சரிப்பில் எழுத்துக்கள் தெளிவின்றி அமைந்தன. பிள்ளைகள் யாவரும் பாடமாக்கிக் கொண்டது சிறப்பாகும். இதற்காகச் சிறப்பாகப் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டுகின்றேன். போட்டியில் பங்குபற்றிய எல்லாப் பிள்ளைகளும் வெற்றியாளர்களே! தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றிப் பரிசுகள் பெற்றுச் சிறப்படைய வேண்டுகின்றேன் என்றார். அ.புவனேந்திரன் கருத்துரையில் போட்டி நிகழ்வுகளை நடாத்துவது என்பது மிகவும் கடினமான விடயமாகும் இக்கடினமான விடயத்தை ஆண்டுதோறும் ஒழுங்குபடுத்தி நடாத்திவரும் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் யாவருக்கும் எனது பாராட்டுதலும் வாழ்த்துதலும் உரித்தாகுக. இத்திருக்குறள் போட்டியில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர்களை ஒழுங்குபடுத்தி ஊக்கம் கொடுத்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இங்கு எழுதியிருப்பது போல் "கற்க கசடற" என்பதிற்கமைய எல்லா மாணவர்களும் திருக்குறளைப் பாடமாக்கியுள்ளார்கள். அதேபோல் பொருளையும் பாடமாக்கி ஒப்பிவித்துள்ளார்கள். எளிமையான முறையில் பொருளைப் பாடமாக்கிக் கொள்ளுதல் நன்று. இம்முறையில் திருக்குறளின் கருத்தைப் பாடமாக்கிக் கொள்ள ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒத்தாசை புரிதல் வேண்டும். இப் போட்டி நிகழ்வு தொடர்ந்து நடைபெற எனது வாழ்த்துக்கள் எனக் கூறினார்.
க.அருந்தவராஜா உரையாற்றுகையில் மாணவர்கள் திருக்குறளைப் பாடமாக்கி இங்கு வந்து பங்குபற்றியமையைப் பாராட்டுகின்றோம். மாணவர்கள் திருக்குறளைப் பாடமாக்க வேண்டும். போட்டியில் பங்குபற்ற வேண்டும். பரிசு பெறவேண்டும். இவ்வாறு இவர்கள் தங்களைத் தயார்படுத்த வேண்டும். எல்லாப் பிள்ளைகளுக்கும் பரிசு கொடுப்பது என்பது கஷ்டமான விடயம் தான். பெற்றோர்கள் எல்லோரும் பொது நோக்கில் இருந்தாலும், என்னுடைய பிள்ளை என்ற நிலை வரும்போது பரிசு பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள். பிள்ளைகள் சென்ற வருடத்தைவிட இம்முறை எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றார்கள் என்று பார்த்தோமானால் நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்கள் திருக்குறளைப் பாடமாக்கி இங்கு வந்து போட்டியில் பங்குபற்றியுள்ளார்கள். இவர்கள் யாவருக்கும் நடுவர்கள் சார்பாகவும், பாடசாலை சார்பாகவும் பெரும் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவர்களை நாம் ஊக்குவிக்கின்றோம். இங்கு ஏன் தமிழ் படிக்க வேண்டும்? ஏன் போட்டியில் பங்குபற்ற வேண்டும்? என்று பல மாணவர்கள் கேட்பது வழக்கம் ஆனால் இன்று இந்த மாணவர்கள் திருக்குறளைப் பாடமாக்கி வந்து மேடையில் சொன்ன விதம் அவர்கள் முயற்சி செய்து பாடமாக்கி பரிசுபெற வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மனக்கூச்சம், பதற்றம், பயம், என்பவற்றை இல்லாதொழிக்கப் போட்டியில் பங்குபற்ற வேண்டும். போட்டியில் தோல்வியடைந்து விட்டோம் என யாரும் சோர்வடைய வேண்டாம். பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்கம் கொடுத்துப் பிள்ளைகளைப் பங்குபற்றச் செய்தல் வேண்டும். சென்ற முறை பரிசு பெறாதவர்கள் இம்முறை பரிசு பெறுகின்றார்கள் என்றால் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
திருக்குறளைப் பிள்ளைகள் பொருள் விளங்கும் முறையில் பிரித்துப் பாடமாக்கியுள்ளனர். இது சிறப்பாக இருந்தது. இதே போல் உச்சரிப்பிலும் கவனம் செலுத்தல் வேண்டும். திருக்குறள் பல தத்துவ உண்மைகளைக் கொண்டுள்ளது. நாம் அவற்றை எந்த வகையான தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். திருக்குறள் அ என்ற உயிரெழுத்தில் தொடங்கி ன் என்ற மெய்யெழுத்தில் முடிவுறுகின்றது. திருக்குறள் 2038 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டுள்ளது. 12,000 சொற்களையும் 35,899 எழுத்துக்களையும் கொண்டுள்ளது. பல சிறப்புக்கள் வாய்ந்துள்ள திருக்குறளை கற்றுப் பயன் பெறுவோம் எனக் கூறினார்.
பெற்றோர் சார்பில் திருமதி.ஜெயதேவி மகேந்திரன் கருத்துரை வழங்கினார். அவர் திருக்குறள் போட்டியை வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை தொடந்து நடாத்த வேண்டும் என்றும் நடுவர்களாகச் சேவை புரிந்து பிள்ளைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வண்ணம் கருத்துரைகள் வழங்கிய நடுவர்களுக்கு நன்றியும் கூறினார்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிச் கேடயங்களும் சகல மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்துச் சிறப்பிக்கப்பட்டனர். இறுதியாக பாடசாலையின் பெற்றோர் சார்பில் கௌரீஸ்வரன் நன்றி கூறினார். அவர் பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்புச் செய்த யாவருக்கும் நன்றி கூறியதோடு குறிப்பாக போட்டிகளுக்காக ஒத்துழைப்பைத் தொடந்து வழங்கிவரும் ஜேர்மனி தமிழ்க் கல்விச் சேவையினருக்கும் நன்றி கூறினார். |