Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, May 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
 
ஈழப் போராட்டம் பற்றியதே என்னுடைய முதற் கவிதை
கவிஞர் யுகபாரதி சொல்கின்றார்

கவிஞர், பாடலாசிரியர், பதிப்பக உரிைமயாளர், பத்திரிகையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் யுகபாரதி. பொய்ம்மையும், அலங்காரமும் நிறைந்த திரையுலகில் இருந்தாலும், தனது அடையாளங்களைத் தொலைக்காமல் இயங்கி வருபவர். ஓர் அதிகாலை நேரத்தில் யுகபாரதியை சந்தித்து விரிவான பேட்டி ஒன்றை தமிழக இணையத்தளமான `கீற்று' வெளியிட்டிருக்கின்றது. தனக்கு சரியெனப் பட்டதை எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லும் அவரது இயல்பு பேட்டியை செறிவானதாகவும், சுவாரசியமானதாகவும் மாற்றியது. அவரது அந்தப் பேட்டியிலிருந்து முக்கியமான பகுதிகளை இங்கு தருகின்றோம்.

உங்கள் குடும்பப் பின்னணி குறித்து?

என்னோட ஊர் தஞ்சாவூர். அப்பா கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராக இருந்தார். இப்பவும் இருக்கார். அப்பா கட்சியில் இருக்கிறதாலே, வீட்டில் எப்போதும் ஆட்கள் இருப்பார்கள். அரசியல், இலக்கியம்னு சூடா விவாதம் நடக்கும். இலக்கியம்னா மார்க்ஸிம் கார்க்கியோட `தாய்' தான். அவங்க ஒரு விடயத்தை எடுத்துக்கிட்டு இதுதான் சரின்னு சொல்லும்போதே அப்ப இதுக்கு எதிரானது எதுன்னு தெரிஞ்சிக்கிற ஆர்வம் வந்தது. சாமி இல்லைன்னு சொன்னா கோவிலுக்கு போகணுமுன்னு தோணிச்சு. என்னோட அம்மா தீவிர பக்தை. ஆனா அவங்க நம்பிக்கையில் அப்பா தலையிட்டது இல்லை. அதேபோல் அப்பாவையும் அம்மா கேள்வி கேட்கிறது இல்லை.

ரொம்பவும் ஜனநாயகமா இருந்தது என்னோட வீடு. பள்ளிப்பாடம் பத்தி என்னோடு அப்பா பேசினதே இல்லை. ஆனா எப்பவும் ஏதாவது படின்னு சொல்லிட்டே இருப்பார். வீடு முழுக்க ரஷ்ய புத்தகங்கள் இருந்ததால் அதைத்தான் படிக்க முடிஞ்சது. படிக்கும் போது அந்த வயதுக்கே உரிய சந்தேகங்கள் நிறைய வந்தது.

அப்பா அதை மென்மையா சொல்லிக் கொடுப்பார். பொதுவாவே இயக்கவாதிகள் கிட்ட ஒரு விடயத்தை சொல்றதில் எளிமையும், அரவணைப்பும் இருக்கும். அது எங்க அப்பாகிட்ட அதிகமாவே இருந்தது.

வீட்டில் எப்பவும் ஆட்கள் அதிகம் இருக்கிறதால ஏதாவது விவாதங்கள் நடந்துகிட்டே இருக்கும். நானும் விவாதத்தில் கலந்துப்பேன். என்னோட கருத்துக்களையும் சொல்லுவேன். அது தவறா இருந்தா மென்மையா சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு கருத்தை ஆணித்தரமா சொல்லணும்னா அதுக்கு ஆதாரம் வேணும்னு தோணிச்சு. அப்பதான் படிக்க ஆரம்பிச்சேன்.

ஒரு கட்டத்தில இந்த விவாதங்களால எந்தப் பயனும் இல்லைன்னு தோணிச்சு. சொன்ன விடயத்தையே எல்லாரும் திரும்பித் திரும்பி சொல்லிக்கிட்டிருக்காங்க. இதுல இருந்து தப்பிக்க நினைச்சப்ப இலக்கியம், கவிதைகள் பக்கம் மனசு திரும்பிச்சு. அது ரொம்ப ஆத்மார்த்தமா இருந்தது.

அப்ப ஈழத்தில் போராட்டம் தொடங்கி தமிழகத்தில அதன் தீவிரம் வெளிப்பட்ட தருணம். இடதுசாரிகள் அப்ப அதை ஆதரிக்கவில்லை. ஆனா அப்பாவுக்கு அதில் ஆர்வம் இருந்தது. அந்த நேரத்தில் வீட்டுக்கு நிறைய ஈழத் தமிழர்கள் வர ஆரம்பிச்சாங்க. அதில் நித்தின்னு ஒருத்தர் வருவார். அதிகாலையில் தான் வருவார். அவர் வந்ததும் இரண்டு நாற்காலிகள் வெளியே போகும். வீட்டுக்கு வெளியே இருக்கிற ஒரு வேப்பமரத்தடியில் அப்பாவும் அவரும் உட்கார்ந்து பேசுவாங்க. அம்மா காஃபி எடுத்துட்டு போவாங்க. அப்பா மட்டும் குடிப்பார். நித்தி வேண்டாம்னு சொல்லுவார். விடியறதுக்குள்ள நித்தி கிளம்பி போயிடுவார்.

ஒருவாரம் போயிருக்கும். அம்மா காஃபி எடுத்துட்டு போறதும், திரும்பி எடுத்துட்டு வர்றதும் தொடர்ந்தது. ஒருநாள் அம்மா கேட்டாங்க, `காஃபி குடிக்கிற பழக்கம் இல்லைன்னா முதநாளே சொல்லியிருக்கலாமே, நான் இப்படி தினமும் எடுத்துட்டு வரமாட்டேனே' அப்பதான் அவர் சொன்னார், `இல்லை இப்ப தினமும் நீங்க தர்றீங்கன்னு குடிச்சா, நாளைக்கு களத்தில ஒரு காஃபிக்காக கூட நான் சோரம் போயிடலாம் இல்லையா' என்னை அதிரவைத்த பதில் இது. இப்படியும் ஒருத்தர் சமூகத்தை நேசிக்க முடியுமா, அதுக்காக தன் விருப்பங்களை விட்டுக்கொடுத்து இவ்வளவு கட்டுப்பாடா இருக்க முடியுமா என்று கேள்வி வந்தது. நானும் இதுமாதிரி ஒரு வேறுபட்ட தளத்தில் தான் இயங்கணும்னு முடிவு பண்ணினேன்.

அப்பதான் ஈழப்போராட்டம் பத்தி ஒரு கவிதை எழுதினேன். என்னுடைய முதல் கவிதை அது. அப்ப எனக்கு 13 வயது. தமிழர் கண்ணோட்டம் பத்திரிகையில் வெளிவந்தது. அந்தக் கவிதை வெளிவந்த பிறகு தமிழாசிரியரா இருந்த என் அப்பாவோட நண்பர் செல்வகணேசன் என்னைக் கூப்பிட்டு வாழ்த்தினார். கவிதை எழுத மரபு முக்கியம்னு சொல்லிக் கொடுத்தவர் அவர்தான். அடுத்த நான்கு வருடங்கள் எல்லா மாலைவேளைகளும் அவர் வீட்டில் தான் செலவழிச்சேன். எங்க வீட்டை விட அங்க புத்தகங்கள் அதிகம் இருக்கும். அவர் மனைவி வைரமுத்து கவிதைகளில் ஆராய்ச்சி பண்ணுவாங்க. அவங்க தான் என்னிடம் புதுக்கவிதை பத்தி பகிர்ந்துகிட்டவங்க.

அப்புறம் தொடர்ச்சியா கவிதை எழுத ஆரம்பிச்சேன். என்னோட இந்த செயல்கள் எல்லாம் அம்மாவுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. அப்பா மாதிரி இல்லாம நான் வேறு ஒரு துறையை தேர்ந்தெடுத்தது அவங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. வீட்டுக்கு வர்ற எல்லார்கிட்டயும் என்னோட கவிதைகள் பத்தி பேச ஆரம்பிச்சாங்க.

மார்க்சிய குடும்ப சூழல் உங்களோடது. அவங்களோட விவாதம் பண்றதுக்காக படிக்க ஆரம்பிக்கிறீங்க. இலக்கியம் மேல் ஆர்வம் வந்து கவிதைகள் எழுதியிருங்கீங்க. ஈழப்போராட்டத்திலும் தொடர்பு இருக்கு. உங்களோட இயங்குதலின் சித்தாந்தம் எதுவா இருக்கு?

இயங்குதலோட சித்தாந்தத்தை யாருமே விவரிக்க முடியாது என்பதுதான் இயங்குதலோட சித்தாந்தமே. நான் சரின்னு நினைச்ச எல்லாமே இன்னிக்கு தவறா இருக்கு. நான் தவறுன்னு நினைச்ச எல்லாமே ஒரு கட்டத்தில் சரின்னு தோணியிருக்கு. தனிநபர் வளர்ச்சி, தனிநபர் ஒழுக்கம் இதைப் பத்தியெல்லாம் யோசிக்கும்போது இரண்டு விடயம் தான் எனக்குத் தோணுது.

தனியா ஒருத்தன் வளர்ந்துடவே முடியாது. அப்ப நமக்குன்னு ஒரு அரசியல் தேவைப்படுது. அது அரசியல் கட்சியாக இருக்கணுங்கிற அவசியம் இல்லை. தமிழ்ல குறிப்பா சொன்னா சங்க இலக்கியத்தில் இருந்தே எந்த படைப்பாளனும் தன்னை குழு அடையாளத்தோடு பிரதிபலிச்சதே கிடையாது. பொதுத் தன்மையோடு தான் இயங்கியிருக்காங்க.

பொதுவாகவே படைப்பாளிகள் முற்போக்கு, இடதுசாரி சிந்தனைகளோடு தான் இயங்குவாங்க. நானும் அப்படித்தான் இயங்கிட்டிருக்கேன். சிலர் முரண்படலாம். அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. மக்கள் விரோத கருத்துக்களை சினிமாவில எழுதக்கூடாதுன்னு கவனமா இருக்கேன்.

உங்களோட `வணக்கம் காம்ரேட்'ங்கிற கவிதையை இடதுசாரிகளைத் தாக்குவதற்கு அதிகம் பயன்படுத்தினார்கள். அந்தக் கவிதை எழுதும்போது இருந்த மனநிலைதான் இப்போதும் இருக்கிறதா?

கவிதையின் ஆகப்பெரும் பயன்பாடு குறித்து ஒரு படைப்பாளி எப்போதுமே சிந்திக்கக்கூடாது. இந்தக் கவிதை, அல்லது கதை எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற முன்யோசனையோடு ஒரு படைப்பாளி எதையும் எழுதக்கூடாது. அந்தக் கவிதை எழுதும்போது என்னோட வயசு 18. எங்க வீட்டுல நான் இருந்த சூழ்நிலையில் நீங்க இருந்தா உங்களுக்கு கம்யூனிசமே பிடிக்காது.

எங்க வீட்டு அடுப்பு அணையவே அணையாது. வீட்டுக்கு யாராவது வந்துட்டே இருப்பாங்க. அம்மா அடுப்படியிலேயே இருப்பாங்க. காஃபி, சாப்பாடு ஏதாவது ஒண்ணு நடந்துகிட்டே இருக்கும். இவங்களுக்கு வேற வேலையே கிடையாதா, இதுதான் புரட்சியான்னெல்லாம் எனக்குத் தோணும். புரட்சி மீது எனக்கு விரக்தி கிடையாது. எப்ப பார்த்தாலும் அம்மா அடுப்படியிலேயே இருக்காங்களேங்கிற தாய் மீதான அதீத நேசம்தான் அக்கேள்வியைக் கேட்க வைத்தது.

நான் என்னோட உலகத்தை என் வீட்டிலிருந்துதான் பார்க்கறேன். உலகம் முழுவதையும் வீடா பார்க்கிற மனோபாவம் எனக்கு வளரலைன்னு நினைக்கிறேன். எங்க வீடு ரொம்ப கொடுமையா இருக்கும். திடீர்னு வீட்டுக்குத் தோழர்கள் வந்து அடுத்த மாதம் பத்தாம் திகதி திண்டிவனத்துல செயற்குழு கூட்டம்னு சொல்லிட்டுப் போவாங்க . போகிறதுக்கு காசு வேணும். ஒன்பதாம் திகதி எங்க அம்மாவோட ஏதாவது ஒரு நகை அடகுக் கடைக்குப் போகும்.

அப்பா முழுநேர கட்சி ஊழியரா இருந்தார். அதுக்காக கட்சி கொடுக்கிற பணத்தையும் அவர் வாங்கிக்கலை. மக்களுக்கு சேவை செய்யணும்னு முழு மனதோடும் தார்மீக ஆசையோடும் தான் அதை அவர் செய்தார். அவர் ஊதாரியோ குடிகாரரோ இல்லை. மக்களை நேசிக்கிறார். அதனால் ஏன் வேலை செய்யலைன்னு அப்பாவை நாங்கள் கேள்வி கேட்கவும் துணியவில்லை.

குடும்ப சூழ்நிலை வேற மாதிரி இருந்தது. வீட்ல நானும் தம்பியும் படிச்சிட்டிருந்தோம். பரீட்சைக்குப் பணம் கட்டணும்னு அப்பாக்கிட்ட போய்க்கேட்டா நாளைக்கு போஸ்டர் வாங்கணும் முந்நூறு ரூபாய் தான் இருக்குன்னு சொல்வார். பரீட்சை முக்கியமா, போஸ்டர் முக்கியமான்னு கேட்டா எல்லாம்......புரட்சி வந்தா மாறிடும்டா அப்ப இந்த பீஸ் எல்லாம் தேவைப்படாதுன்னு சொல்லுவார். மாறுவது இருக்கட்டும். இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில் வாழ்ந்தாகணுங்கிற யதார்த்தம் அவருக்குப் புரியாது.

இதைத்தான் கவிதையா எழுதினேன். பக்கத்து வீட்டுத் தாத்தா இயேசு வரார். இயேசு வரார்னு சொல்லிக்கிட்டே இருக்கிற மாதிரி இவரும் புரட்சி வருது, புரட்சி வருதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கார்னு எழுதினேன். அது ஒரு விடலைத்தனமான குறும்பு. அதைப் பதிவு பண்ணினேன். அவ்வளவுதான்.

அந்தக் கவிதை இந்தளவுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எங்க அப்பாதைய கட்சியில் இருந்தே விலக்கி வைக்கிற சூழ்நிலை உருவாகும்னு நான் நினைக்கவே இல்லை.அப்பவும் அப்பா என்னை எதுவும் சொல்லலை. கவிதை எழுதறது அவனோட விருப்பம். அதுல நான் தலையிட மாட்டேன். அது அவனோட கருத்துச் சுதந்திரம் .ஆனா கட்சி சார்பில் இந்தப் புத்தகத்தை எரிக்கணும்னா நானும் வரேன்னு சொல்லிட்டு வந்தார்.

இப்படி ஒரு அப்பாவைப் பார்த்த பிறகு ஒருத்தனுக்கு எப்படி மார்க்சியத்தின் மீது வெறுப்பு வரும்? ஆனா வீட்டு சூழ்நிலை இப்படித்தான் இருந்ததுன்னு நான் எப்படி சொல்லாம இருக்க முடியும்? அந்த நேரத்து ஆதங்கம் தான் அந்தக் கவிதை. அதை எந்தவித பிரசாரத் தொனியும் இல்லாம அந்த நேரத்து மொழிப்பயிற்சியோட எழுதியிருப்பேன். எனக்கு என்ன தோணுதோ அதை எழுதுறதுக்கான முழுச் சுதந்திரமும் எனக்கு இருக்கு. எப்போதுமே நான் எதிர்வினையை நோக்கி எழுதியதில்லை.

பெண் கவிஞர்கள் மீது என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளை திரைப்பட பாடலாசிரியர்கள் வைத்தார்களோ அதைவிட மோசமான வரிகள் திரைப்படப் பாடல்களில் வருகிறதே?

திரைப்படப் பாடலாசிரியர்கள் எல்லாருமே கவிஞர்கள் கிடையாது. என்னைக் கவிஞனாக நினைத்து எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாதுன்னு நான் விரும்புறேன். ஏன்னா பாடலாசிரியரா நான் என்னைப் பிரகடனப்படுத்தி விட்டேன்.

இயக்குநர் சொல்லக்கூடிய வேலைகளை சொல்லக்கூடியவன் பாடலாசிரியன். அவ்வளவுதான். அவனுக்கு நீங்க கவியரசு. கவிப்பேரரசுன்னு எந்தப்பட்டமும் குடுக்க வேண்டிய அவசியமில்லை. கவிதை வேறு, பாடல் வேறுங்கிறதை தெளிவா புரிஞ்சுக்கணும். இயக்குநர் விவரிக்கிற காட்சியை எழுதுவதற்கு ஒரு நபர் தேவை. அவன் கவிஞனா இருக்கணுங்கிற எந்த அவசியமும் இல்லை.

திரைப்படப் பாடல்கள் எப்பவும் சமூகத்தை போல அரசியலைப் போல ஆபாசமாகத்தான் இருக்கு. இப்ப அது அதிகமா தெரியறதுக்கு காரணம் இப்ப இருக்கிற காட்சி அமைப்புதான். தொடர்ச்சியா காட்சி ஊடகம் செய்யும் மோசடியும் ஒரு காரணம். வரிகள் ஆபாசமா இருக்குங்கிறதை நான் மறுக்கலை. இது ஏற்கனவே இருந்தது தான். இன்னும் இருந்துக்கிட்டுத்தான் இருக்கும். இயக்குநரோ, பாடலாசிரியரோ தயங்கி அதை நிறுத்தினால் தான் உண்டு.

இங்கு இருக்கிற நடன இயக்குநர்களுக்குத் தமிழ் தெரியாது. பாடல்ல மனசுன்னு ஒரு வரிவந்தா கேமராவை மார்புப் பக்கம் வைக்கிறாங்க. காட்சி அமைப்புகள் மோசமாவதற்கு இதுவும் ஒரு காரணம் .இதையும் தாண்டி அந்தப் படத்தோட இயக்குநருக்கு எவ்வளவு இலக்கிய அறிவு இருக்கோ அந்த அளவிற்குத் தான் பாடல் வெளிவரும். வியாபாரத் தேவை இருக்கிறதாக ஒரு காரணத்தை சொல்வாங்க. வியாபாரத் தேவைக்காக வந்த எல்லாப் பாடல்களும் வெற்றி பெறவும் இல்லை. நான் நிறைய மெலடி பாட்டுகள் தான் எழுதியிருக்கேன். ஆனாலும், துள்ளல் இசைப்பாடல்கள் தான் சீக்கிரம் கவனம் பெறுது.

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com