|
விதுரன்
வன்னிக்குள் படையினரை இழுத்து அலைக்கழித்து புலிகள் தினமும் அவர்களுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் அரசும் படைத்தரப்பும் இதனை முற்றாக மூடி மறைக்க முற்படுவதாகவும் மக்கள் விசனமடையத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் 23 ஆம் திகதி முகமாலையில் மட்டும் 200 படையினர் வரை கொல்லப்பட்டதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளே ஒப்புக் கொண்ட நிலையில் கடந்த மாதம் முழுவதும் 120 படையினர் மட்டுமே கொல்லப்பட்டதாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா பாராளுமன்றில் கூறியது தென்பகுதி மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. வடக்கே தினமும் பெருமளவு படையினர் கொல்லப்படுவதும் உண்மையே என்பதை, இப்போது இந்தப் பொய்கள் மூலம் உணரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் ஊடகங்களுடனும் போர் தொடுக்க அரசும் படைத் தரப்பும் தீர்மானித்துவிட்டன. களமுனைத் தகவல்கள் எதனையும் எந்தவொரு ஊடகத்திற்கும் தெரிவிக்கக் கூடாதென இராணுவத் தளபதி சகல கட்டளைத் தளபதிகள் ஊடாகவும் களமுனைத் தளபதிகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளார். இதனை மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர்கடுமையாக எச்சரித்துள்ளார். களமுனையில் தினமும் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையின் மர்மம் என்ன என்பதை இப்போதாவது தென்பகுதி மக்கள் உணர்ந்திருப்பர்.
மூழ்கடிக்கப்பட்ட கப்பல்
திருகோணமலைத் துறைமுகத்தில் கடற்படையினரின் வழங்கல் கப்பலொன்றை நேற்று சனிக்கிழமை அதிகாலை தாக்கி மூழ்கடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து யாழ்.குடாநாட்டிலுள்ள படையினருக்கு ஆயுதங்கள் மற்றும் போர்த் தளபாடங்களை ஏற்றிச் செல்வதற்குத் தயாராக நின்றபோதே அதிகாலை 2.30 மணியளவில் இந்தக் கப்பலை கடற்கரும்புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகள் தாக்கியழித்து மூழ்கடித்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து அவசர அவசரமாக படையினர் அண்மையில் பெருமளவு ஆயுதங்களையும் போர்த் தளபாடங்களையும் தருவித்திருந்தனர். கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு துறைமுகத்திலிருந்து பல கொள்கலன்களில் இராணுவத் தளபாடங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட செய்தியை புலிகள் தெரிவித்துள்ளனர்.
`எம்.வி.இன்வின்சிபிள்' (ஏ520) என்ற சரக்குக் கப்பலே திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து மூழ்கடிக்கப்பட்டதாகவும் எனினும் இதனைப் படையினர் பயன்படுத்துவதில்லையெனவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.
எனினும், இந்தக் கப்பல் தகர்த்தழிக்கப்பட்டமை படையினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கடற்பரப்பினூடாக வந்தே கடற்கரும்புலிகள் நீருக்கடியில் இந்தக் கப்பலைத் தாக்கி அழித்துள்ளமை கடற்படையினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலைத் துறைமுகம் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்பதுடன் துறைமுகத்திற்குள்ளும் வெளியேயும் 24 மணிநேரமும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதைவிட புலிகளின் நீரடி நீச்சல் பிரிவின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதத்தில் நீரடி பாதுகாப்பு ஏற்பாடுகளும் இங்குள்ளன.
அப்படியிருந்தும் கடற்கரும்புலிகள் மிக நீண்டதூரத்திலிருந்து வந்து எப்படி இவ்வாறானதொரு தாக்குதலை நடத்தினார்களென்ற கேள்வி எழுந்துள்ளது.
குடாநாட்டுக்கு ஆயுதங்களை ஏற்றிச்செல்லத் தயாராயிருந்த 80 மீற்றர் நீளமான ஆயுதக் கப்பலே இதுவென புலிகள் கூறுகின்றனர். எனினும் இது ஆயுதக் கப்பலல்ல, பழுதுபார்ப்பதற்காக அஷ்ரப் இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்ததென படையினர் கூறுகின்றனர்.
துறைமுகத்தினுள் நுழைந்து கடலடி பாதுகாப்பு பொறிமுறையிலும் சிக்காது எவ்வாறு கடற்கரும்புலிகள் இதனைத் தகர்த்தழித்தனர் என்ற கேள்வி படையினரை உலுக்கியுள்ளதுடன், இனிமேல் இந்தத் துறைமுகத்தினுள் நிற்கும் கப்பல்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கனவே முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் ரோந்து சென்ற அதிவேக டோரா பீரங்கிப் படகு கடற்கரும்புலிகளின் நீருக்கடியிலான தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதன் மர்மம் தெரியாது கடற்படையினர் தடுமாறி வந்த நிலையில், தற்போது திருமலை கடற்படைத் தளத்துடன் இணைந்த துறைமுகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் நீருக்கடியிலான தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டுள்ளதால் கடற்புலிகள் தங்கள் நீரடித் தாக்குதல் உத்தியை விரிவுபடுத்தத் தொடங்கிவிட்டார்களென்பதை உணரமுடிகிறது.
இது திருகோணமலைக் கடற்படைத் தளத்தினதும் துறைமுகத்தினதும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவின் அல்லது கடற்புலிகளின் புதுவகைத் தாக்குதல் உத்திகளுக்கெதிராக என்ன செய்வதென்ற குழப்பமானதொரு நிலையை படையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் ஆயுதக் கப்பலை இலக்கு வைத்ததாயிருந்தால் நிலைமை மிக மோசமடைந்து விட்டதென்பதை படையினர் உணர்ந்திருப்பர். கொழும்பிற்கும் குடாநாட்டுக்கும் அல்லது திருமலைக்கும் குடாநாட்டுக்கும் இடையிலான படையினரின் விநியோகம் கடல் வழியாகவே நடைபெறுவதாலும் திருமலைக்கும் குடாநாட்டுக்கும் இடையே ஆயிரக்கணக்கான படையினர் துருப்புக்காவிக் கப்பல்களிலேயே போக்குவரத்துச் செய்வதாலும் அந்தக் கப்பல்களின் பாதுகாப்புக் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தக் கப்பல் மீதான தாக்குதலுக்கு கடற்கரும்புலிகள் முல்லைத்தீவிலிருந்து வந்தார்களா அல்லது வேறு எங்காவது அருகிலிருந்து வந்தார்களா என்ற கேள்விகளும் எழுகிறது. எனினும் இயற்கை அரண் நிறைந்த இந்தத் துறைமுகத்தினுள் இடம்பெற்ற நீரடித் தாக்குதலானது கடற்படையினருக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாகும். அத்துடன் கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவின் இவ்வகைத் தாக்குதல், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைத் துறைமுகத்துடன் நின்றுவிடுமா அல்லது அனைத்துப் பகுதியிலும் தொடருமா என்ற கேள்வியும் எழுகிறது. |