கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொறுப்பில் ஒப்படைப்பதன் மூலம் அந்தப் பிராந்தியத்தில் `புதிய உதயத்தைத்' தோற்றுவிக்கும் சமிக்ஞையாகக் கொள்ள முடியுமென அரசாங்கம் உறுதிமொழி அளித்ததற்கிணங்க அதன் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எண் 308886 வாக்குகளையும் போனஸ் ஆசனங்கள் இரண்டு உள்ளடங்கலாக 20 ஆசனங்களைப் பெற்று நிர்வாகத்தை தன்வசமாக்கிக் கொண்டுள்ளது. கிழக்கின் மொத்த சனத்தொகை 14 இலட்சத்து 19 ஆயிரத்து 602 பேராகும். இதில் 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 பேர் தகுதி பெற்ற வாக்காளர்களாகும். இந்த மொத்த வாக்காளர்களில் மூன்றிலொரு பகுதியினர் அரசாங்கத்திற்கும் அதனுடன் இணைந்து போட்டியிட்ட தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.
இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. மற்றும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றுக்கு 250732 வாக்குகள் கிடைத்துள்ளன.
கிழக்கு மாகாண வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கையில் 646456 பேரே அதாவது 65.78% வீதமானோரே வாக்களித்திருக்கின்றனர். இவற்றில் 54,780 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது 8.47 சதவீதமாகும்.
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தில் எதிர்க்கட்சியாக அமரவுள்ள ஐ.தே.க. - மு.கா. கூட்டணியானது ஐ.ம.சு.மு. வைவிட 58,154 வாக்குகளையே குறைவாகப் பெற்றுள்ளது.
இதேவேளை, தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக நேற்று அறிவித்திருக்கும் ஐ.தே.க. வும் முஸ்லிம் காங்கிரஸும் முன்னொருபோதுமில்லாதவாறு தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் நீதிமன்றம் சென்று பரிகாரம் காணப்போவதாகவும் அறிவித்துள்ளன. இக்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்ப்பதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் அறிவிப்புகள் அமைந்துள்ளன.
சனிக்கிழமை இடம்பெற்ற வாக்களிப்பின் போது மிக மோசமான வாக்குமோசடிகளும் வன்முறைகளும் இடம்பெற்றதாகவும், மோசடி இடம்பெற்ற வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணியை உடனடியாக இடைநிறுத்தி அங்கு மீள் வாக்களிப்பை நடத்துமாறு இந்தக் கண்காணிப்பு நிலையம் தேர்தல் ஆணையாளரிடம் தேர்தல் தினத்தன்றே வேண்டுகோள் விடுத்திருந்தது.
அமைச்சர்களின் அடியாட்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் வாக்கு மோசடி, மிரட்டல், வாக்காளர்களை அச்சுறுத்தியமை போன்ற மிக மோசமான அடாவடித்தனங்களில் ஈடுபட்டதாக ஐ.தே.க., மு.கா. மற்றும் சுயாதீன கண்காணிப்பாளர்கள் உடனடியாகவே தெரிவித்த குற்றச்சாட்டுகளை தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்துவந்த அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த போன்றோர் உறுதியாக நிராகரித்திருந்மையும் அவதானிக்க முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வாக்களிப்பு நிலையங்களில் ஐ.தே.க., மு.கா. கட்சிகளின் பிரதிநிதிகளோ முகவர்களோ செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லையென தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.
நீதி, நேர்மையுடன் தேர்தல் நடைபெறவில்லையென தோல்வியடையும் கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றத்தை நாடுவது இலங்கையின் தேர்தல் வரலாற்றில் நீண்டகால நடைமுறையாக இருந்து வருவதையும் காணமுடிகிறது. ஆனால், நேற்று முன்தினம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முன்னொருபோதுமில்லாத வகையில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக அரசியல் கட்சிகளும் சுயாதீன தேர்தல்கள் கண்காணிப்பாளர்களும் தெரிவிக்கும் குற்றசாட்டுக்கள் குறித்து பொறுப்புள்ள அரசாங்கமே தகுந்த பரிகாரம் காண வேண்டும் என்பதும் இந்த விடயம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதும் ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
கிழக்கு தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களின் சுபிட்சமான வாழ்வை உறுதிப்படுத்த முடியுமெனவும் பொருளாதார ரீதியில் மேம்பாட்டை அடையவைக்க இயலுமெனவும் ஆளும்கட்சி வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின் போது தாராளமாக அள்ளி வீசியிருந்தது.
ஆனால், வெற்றிபெற்றவுடனேயே அரசாங்க தரப்பிலிருந்து வெளியிடப்படும் கருத்துகள் ஆரோக்கியமான அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை. மாறாக போர் முழக்கத்திற்கு வலுவூட்டுவதாகவே அவை காணப்படுகின்றமை உண்மையிலேயே கவலையளிக்கும் விடயமாகும்.
`கிழக்கில் அரசு ஈட்டியிருக்கும் வெற்றியானது மேற்குலகின் ஆதரவுடன் ஈழம்வாதிகள் காணும் கனவை சிதறடித்திருப்பதாக ஆளும் கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதுடன் அரசு மீது சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழரும் நம்பிக்கை வைத்திருப்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
தேர்தல் தினத்தில் இடம்பெற்ற வன்முறைகளும் முறைகேடுகளும் பீதி, பதற்றமான சூழ்நிலையே தொடர்வதற்கான அறிகுறியாக காணப்படுவதுடன், எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையுடன் மக்கள் காணப்படுவதையும் இது வெளிப்படுத்துவதாக உள்ளது.
தேர்தல் தமது நிம்மதியற்ற வாழ்வில் மாற்றம் எதனையும் ஏற்படுத்தப்போவதில்லையென்ற விரக்தியுடன் இருக்கும் மக்களுக்கு ஆறுதலளிக்கக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதே யாவரினதும் எதிர்பார்ப்பாகும்.