பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலுள்ள தலிபான் சார்பு போராளிகளுக்கும் அந்நாட்டு அரசுக்குமிடையில் தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரு தரப்பு பிரதிநிதிகளும் அமைதிப் பேச்சுக்களை தொடர்ந்து மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பேச்சுக்களை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்தலாமென அரசாங்கம் கருதுகிறது.
இப் போராளிக் குழு இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தக்கோரி கடந்த வருடம் போராட்டத்தில் ஈடுபட்ட மதகுரு மௌலானா பஸ்ருல்லாஹ்வினால் வழிநடத்தப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உடன்படிக்கையின் கீழ் இப் போராளிகளுக்கெதிரான தாக்குதல்களை அரச படைகள் நிறுத்தும் அதேவேளை அரசாங்க படைகள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தல் போன்றவற்றை போராளிகள் நிறுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த வடமேற்கு மாகாண அமைச்சர் வஜிட் அலி கான் இப் போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை ஆராயும் பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
சிறிய சுவிட்ஸர்லாந்து என அழைக்கப்படும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பள்ளத்தாக்கு இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாக விளங்குவதால் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திருந்தது.
ஆனால் கடந்த வருடம் மௌலானா பஸ்ருல்லாஹ் தலைமையிலான போராளிகள் இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.