ஜே.வி.பி.யின் பிளவு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி மலர வழி வகுத்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆர்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கம்பளையில் இடம்பெற்ற ஐ.தே.க. ஆதரவாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
பொருட்களின் விலையுயர்வும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அரசியல் மட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்டுள்ள பிளவும் ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் ஆட்சிக்கு வர வழி செய்யும்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த சிலர் பதவிகளுக்காக கட்சி தாவினாலும் கூட மக்கள் கட்சியை விட்டுப் போகவில்லை. இக்கூட்டத்திற்கு நான் எதிர்பார்த்ததை விடவும் பெருமளவில் மக்கள் வந்துள்ளமையாலும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருக்கின்றனர் என்பதைப் புலப்படுத்துகின்றது.
பொருட்களின் விலையுயர்வு கீழ்மட்ட நடுத்தர மட்ட வருமானம் பெறுவோரை மட்டுமன்றி உயர் மட்ட வருமானம் பெறும் மக்களையும் பாதித்துள்ளது.
விலையுயர்வால் மக்களின் நாளாந்த அத்தியாவசிய செலவுகள் அதிகரித்துள்ளன. மக்களிடம் சேமிக்கப் பணம் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் முன்னின்று செயற்பட்டார். இதனால், அவரை மக்கள் இன்றும் நினைவு கூருகின்றனர்.
இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். தற்போது இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பின்றியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
இக்கூட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ஆர்.எம். ஹம்ஜாத், உடபளாத்த பிரதேச சபைத் தலைவர் பி.பி. நுகலியத்த, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பீற்றர் கங்கஹகெதர உட்பட பலரும் கலந்து கொண்டனர்.