தோட்ட ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட தோட்ட மக்கள் சுமார் ஐநூறுபேர் நோய் வாய்ப்பட்ட நிலையில் பசறை, மெட்டிகாதன்ன அரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விரலிபத்தனை - தொழிற்சாலை பிரிவில் அமைந்துள்ள ஷ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் உற்சவம் சனிக்கிழமை ஆரம்பமானபோது பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, மாலைஅடியார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை உட்கொண்ட அனைவருமே திடீரென வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்துள்ளனர்.
இது தொடர்பாக மடுல்சீமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ரட்னாயக்கவிற்கு தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி மடுல்சீமையின் அனைத்து தனியார் வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு சென்ற இ.போ.ச. பஸ் ஆகியவற்றை சேவையில் ஈடுபடுத்தி பாதிப்படைந்தவர்களை மெட்டிகாதன்னை, பசறை அரசினர் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தார்.
பசறை அரசினர் மருத்துவமனையில் 300 பேரும் மெட்டிகாதன்னை அரசின் மருத்துவமனையில் 200 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களை பரிசோதனை செய்த வைத்திய அதிகாரி உட்கொண்ட உணவில் நச்சுத் தன்மையான பொருட்கள் கலந்திருந்தமையே, இவர்கள் நோய்வாய்ப்பட்டதற்கான காரணமாகுமென்று தெரிவித்தார்.
அத்துடன் ஆலய அன்னதான உணவின் ஒரு பகுதி தீவிர பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆண், பெண் தோட்டத் தொழிலாளர்கள், அவர்களின் பிள்ளைகள் ஆகியோரே நோய்வாய்ப்பட்டிருப்பவர்களாவர். இவர்களில் ஒரு சிலர் சுகமாகி வருவதாகவும் பலர் ஆபத்தான நிலையிலிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவதினத்தன்று மாலை 5 மணியளவில் அன்னதானம் உட்கொண்டவர்கள் இரவு 9 மணியளவில் நோய்வாய்ப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, மடுல்சீமை பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ரட்னாயக்க தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.