* அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியதன் மூலமாக அம்மாகாணத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
கிழக்குத் தேர்தல் வாக்களிப்பு மோசடி மற்றும் வன்முறை நிறைந்ததென கூறப்பட்டாலும் அவை தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கள்ளவாக்கு மற்றும் மோசடி என்பன சகல தேர்தல்களிலும் இடம்பெறுகின்றன. எல்லா ஜனநாயக நாடுகளிலும் இது உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் கூட புஷ்ஷின் தெரிவு குறித்துக் கள்ளவாக்கு மோசடியுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகியிருந்தன.
கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கூட கள்ளவாக்கு மற்றும் மோசடி மூலம் வந்தவர்களேயாகும்.
கிழக்கு தேர்தல் முடிவுகள் மூலம் மக்களின் தீர்மானம் தெளிவாகியுள்ளது. இதனை ஈ.பி.டி.பி.ஏற்றுக் கொள்கிறது.
வடக்கு செயலணி தலைமைப் பதவியை ஜனாதிபதி என்னிடம் கையளித்தபோது `டக்ளஸ் சிறிய அளவிலான அதிகாரங்களைக் கேட்டார். ஆனால், நான் அவருக்கு கூடிய அதிகாரங்களை வழங்குகிறேன்' என்றார்.
இந்நிலையில் , வடக்கும் கிழக்கும் சமாந்தரமாக அபிவிருத்தியை எட்டும். மாகாண சபை தீர்வுத் திட்டத்தை ஆரம்பமாகக் கொண்ட இறுதித் தீர்வுக்கு இது உதவியாக அமையும்.