* `கபே' கடும் கண்டனம்
நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த வகையிலும் சுதந்திரமானதும் நீதியானதுமாக உறுதிப்படுத்திச் சொல்லமுடியாதவாறு சட்டத்தின் உயரிய தன்மையினை மீறி வன்முறையின் உயரிய தன்மை வெற்றி பெற்றமை தெளிவான வாக்கு மோசடியாகுமென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கானமக்கள் இயக்கம் (CAFFE) தெரிவித்துள்ளது.
கிழக்குமாகாண சபைத் தேர்தல் வாக்களிப்புத் தொடர்பாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள இடைக்கால அறிக்ைகயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வாக்களர்களை வாக்குச்சாவடியில் இருந்து திருப்பியனுப்புதல், வாக்களிக்கக் கூடாது என அச்சுறுத்துதல் போன்ற நிகழ்வுகள் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளன.
வாக்குச்சாவடிப் பிரதிநிகளைத் தாக்குதல் அவர்களைத் திருப்பியனுப்புதல், வாக்குச்சாவடிகளுக்கு வருவதனைத் தடுத்தல், கடத்தல் அதிகரித்திருந்தன காலையில் வாக்குச்சாவடிக்கு வருகைதந்த பிரதிநிதிகள் அச்சுறுத்தலின் காரணமாகப் பகலுடன் திரும்பிச் சென்றதாக எமது கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் உத்தியோகத்தர்கனைத் தாக்குதல், அச்சுறுத்தல் என்பனவும் இதனுள் அடங்கும்.
தேர்தல் கண்காணிப்புக் கடமைக்காக ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியான தடைகள் வாழைச்சேனைப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரமிக்க உத்தியோகத்தர்களின் அறிவித்தல்களைக் கவனத்தில் எடுக்காமை சாதாரண நிகழ்வாக இருந்தது.
ஒழுங்குபடுத்தப்பட்ட காடையர் குழுக்கள் திகாமடுல்ல மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் எங்களின் கண்காணிப்புக்கு உட்பட்டிருந்தனர். இந்தக் குழு தேர்தலுக்கு முதல் நாள் இந்தப் பிரதேசங்களுக்கு வருகைதந்து தமது செயற்பாடுகளைத் திட்டமிட்டதோடு இதனைத் தடுப்பதற்கு முறையான செயற்பாடுகளை மேற்கொள்ள பாதுகாப்புத் தரப்புக்கு முடியவில்லை. தெஹியத்தகண்டியப் பிரதேசத்தில் முழுமையான வன்முறையை ஏற்படுத்துவற்கு இந்தக்குழுவுக்கு முடியுமாகவிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினர் மீது இவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல இடங்கிளில் 14-15 வயதுப் பிள்ளைகள் சுதந்திரமாக கள்ளவாக்கிடுவதற்கான நடவடிக்கைகள், நிகழ்வுகள் பலவற்றை நாங்கள்கண்காணித்துள்ளோம். உண்மையான வாக்குச்சீட்டு மற்றும் அடையாள அட்டை உள்ள மற்றும் இல்லாமல் இச்செயற்பாடு நடைபெற்றது.
அரச இராணுவம் அல்லாத ஆயுதம் ஏந்திய பிரிவினர் தேர்தல் செயற்பாடுகளை வழிநடத்தியிருந்தமையை மட்டக்களப்பின் பல இடங்ளிலும் கல்முனையில் பல இடங்களிலும் நாங்கள் அவதானித்தோம். தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகைதரும் போது ஆயுதம் தாங்கிய பிரிவினர் சற்றுப் பின்வாங்கி மீண்டும் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டமையும் நடைபெற்றது.
இப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் மற்றும் விசேடமான அமைச்சர் ஒருவரின் வழிகாட்டலில் புத்தளம் இடம்பெயர்ந்தோர் முகாம் சிலவற்றிலிருந்து கொண்டுச் செல்லப்பட்ட பிரிவினர் திருகோணமலை வாக்களர்களைத் திருப்பியனுப்பிவிட்டு கள்ளவாக்களித்ததை எங்கள் குழுவினர் கண்காணித்துள்ளனர்.
இதற்குச் சமாந்தரமாக புலிகள் அமைப்பின் ஆயுதச் செயற்பாடுகள் மற்றும் குண்டு வெடிப்புக் காரணத்தினால் திகாமடுல்ல மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வாக்களர்கள் பயமுறுத்தல் செய்யப்பட்டுள்ளனர்
தேர்தல் தினம் காலை 7 மணிமுதல் மாலை 5.30 மணிவரை எமது பிரதான காரியாலயத்திற்குக் கிடைத்த தகவல்களில் உள்ள வன்முறைச் செயற்பாடுகள் / தேர்தல் சட்டத்தினைமீறுதல் தொடர்பான தரவுகள் கீழே காட்டப்பட்டுள்ளன. எங்கள் மாவட்ட இணைப்புக் காரியாலயத்தின் இறுதி அறிக்கை கிடைத்ததும் இது மேலும் அதிகிக்கும்.
மூன்று மாவட்டங்களிலும் வன்முறைச் செயற்பாடுகள் மற்றும் வாக்கு நடைபெற்ற வாக்களிப்பு நிலையங்களில் தேர்தலை இரத்துச் செய்து அந்தப்பிரதேசங்களில் மீண்டும் தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையாளரை நாம் கேட்டுக் கொள்கிறோம்.
தேர்தல் ஆணையாளரின் விசேட கவனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய வாக்குச்சாவடிகளால் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வெருகலில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடி, கப்பல்துறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி,போரைத்தீவு, கொக்கடிச்சோலை, காத்தான்குடி, ஆரையம்பதைி பிரதேசத்திலுள்ள வாக்குச்சாவடிகள், மற்றும் திகாமடுல்ல மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச வாக்குச்சாவடிகள் உள்ளன.