* மூதூரிலிருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு
மூதூர் நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் தாக்குதலுக்கிலக்காகி படுகாயமடைந்த மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஏ.வாஹிட் உடனடியாக அங்கிருந்து இடமாற்றப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு சனிக்கிழமை நடைபெற்ற வேளையில் அன்று மாலை மூதூர் நகரில் பெரும் அசம்பாவிதமொன்று நடைபெற்றது.
மூதூர் நகரிலுள்ள வீடொன்றில் பிரதியமைச்சர் பாயிஸ் தனது ஆதரவாளர்களுடன் தங்கியிருந்த போது அங்கு சென்ற மக்கள், அமைச்சர் பாயிஸை தாக்க முற்பட்டுள்ளனர்.
இது பற்றி அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ஏ.வாஹிட், பிரதி அமைச்சரை தாக்க முற்பட்டவர்களை அங்கிருந்து விரட்ட முற்பட்டபோது அவ்விடத்திற்கு வந்த பிரதி அமைச்சரால் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
அமைச்சரை மீட்க வந்த விஷேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் முன்னிலையிலேயே பொலிஸ் அதிகாரியை பாயிஸ் தாக்கியுள்ளார்.
இத் தாக்குதலுக்கிலக்காகி படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் உடனடியாக மூதூர் பொலிஸ் நிலையத்திலிருந்து கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.