எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜனநாயகத்தின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதாக கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஜே.வி.பி. ஊழலையும், மோசடியையும் நடத்தியவர்களைத் தவிர ஏனைய சகலருமே இத் தேர்தலை வெறுப்புடனேயே பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி.யின் அரசியல் பீடம் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுற்று தேர்தல் முடிவுகள்ங வெளிவந்துள்ளன. தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் அனைத்துமே தேர்தலில் படுமோசமான ஊழல் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருக்கின்றன. சுதந்திரமாக மக்களுக்கு வாக்களிக்க இடமளிக்கப்படவில்லையென அவை சுட்டிக்காட்டியுள்ளன.
அரசாங்கம் இந்தத் தேர்தலில் அரச பலத்தையும், வன்முறைப்பலத்தையும் பணபலத்தையும் அரச ஊடக பலத்தையும் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு பிள்ளையான் குழுவின் ஆயுத பலமும் அதன் விளையாட்டைக்காட்டியுள்ளது.
1981 இல் நடந்த அபிவிருத்தி சபை தேர்தல் 1999 இல் நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தல் என்பனவற்றைவிடவும் படுமோசமான தேர்தலாகவே இதனைக்காண முடிகிறது.
ஊழல், மோசடி, வன்முறைகளுடன் மிக மோசமாக காடைத்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இந்தத் தேர்தல் முடிவானது நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்தியாவினதும், சில மேற்குலகு நாடுகளதும் தேவைக்காகவே அரசாங்கம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியது. தேர்தலொன்றை நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லாத நேரத்திலேயே கிழக்கில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இத்தேர்தலை நடத்துவதற்கு முன்னர் கிழக்கில் சமூக, பொருளாதார கலாசார அபிவிருத்தித் திட்டங்கள் நிறையவே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவை குறித்து கவனம் செலுத்தாமல் அவசரப்பட்டு அரசு தேர்தலை நடத்தியதால் சரிபாதியான மக்கள் வாக்களிக்க முன்வரவில்லை. அளிக்கப்பட்ட வாக்குகளில்கூட பெரும்பகுதி மோசடி செய்து வாக்குப் பெட்டிகளில் நிரப்பப்பட்ட வாக்குகளே ஆகும்.
இத்தேர்தலில் ஜே.வி.பி.யைத் தவிர்ந்த ஏனையவர்கள் அனைவரும் இனவாத நிழலில் நின்றே தேர்தலை எதிர்கொண்டனர். அரசு ஆயுதக்குழுவை வைத்து தமிழ் இனவாதத்தின் பின்னணியிலும், ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் தனிமாகாணத்தின் பின்னணியிலும் நின்று செயற்பட்டன. ஆனால் ஜே.வி.பி. மட்டுமே இனவாதத்துக்கு அப்பால் நின்று தேசிய ஐக்கியத்தை மட்டும் வலியுறுத்தி தேர்தலை எதிர்கொண்டது. நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று பிரித்துப்பார்த்து குரல் கொடுக்கவில்லை. அனைத்து இனங்களுக்கும் ஜே.வி.பி. ஒருமுகத்தையே காட்டியது.
நாம் ஒருபோதும் பிரிவினை வாதத்துக்கு இடமளிக்கப் போவதில்லை. தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு இந்த மாகாண சபைத் தேர்தலின் மூலம் கிட்டும் என எவராவது நினைத்தால் அது முட்டாள்தனமானதாகும். இந்தத் தேர்தலில் கிழக்கு மக்கள் ஏமாறவில்லை. பதிலாக அவர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. எமக்குக் கிடைத்த ஒரு உறுப்பினரை வைத்து கிழக்கு மக்களின் உரிமைக்கான குரலை ஒலிக்கச் செய்வோம்'