* முறைப்பாடுகளைக்கூட ஏற்கவில்லை; ஐ.தே.க. குற்றச்சாட்டு
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது பெரும்பான்மையான வாக்களிப்பு நிலையங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அச்சுறுத்தல், மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளைக் கூட ஏற்காமல் நிராகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
ஜனநாயகத் தேர்தலின் மீது நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டிருப்பதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல விசனம் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளரிடம் முழுவிபரம் கொண்ட முறைப்பாட்டு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரிடமிருந்து கூட நியாயம் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாத நிலையே காணப்படுகிறது. 40க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் மற்றும் அதிகாரிகளும் ஆளும் தரப்புக்குச் சாதகமான போக்கிலேயே நடந்து கொண்டனர். மோசடிகள், வன்முறைகள், இடம்பெற்றபோது அவற்றைத் தடுக்க அவர்கள் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதேசமயம் அது குறித்து எதிரணியினரின் முறைப்பாட்டைக் கூட அதிகாரிகள் உதாசீனம் செய்துள்ளனர்.
மோசடிகள், ஊழல், வன்முறைகள் அனைத்தையும் முழு நாட்டுக்கும் தெளிவுபடுத்த ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கவிருக்கின்றது.
தேர்தல் கண்காணிப்பிலீடுபட்ட சகல கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முறைகேடாகவும் ஊழல் நிறைந்ததாகவுமே நடந்ததாக சுட்டிக்காட்டியிருக்கின்றன. அரசாங்கம் உலகின் கண்களை மூடிமறைக்கப்பார்க்கின்றது. ஆனால், முழு உலகும் உண்மையை ஏற்கனவே அறிந்துகொண்டுவிட்டது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருக்கின்றார்.