கண்டி திரித்துவக் கல்லூரியின் அதிபரான பிரிட்டனைச் சேர்ந்த றொட்றிக் ஆர்.கில்பேட்டின் விசா இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் கேட்டுள்ளது.
கண்டியின் பிரபலமான பாடசாலைகளில் ஒன்றான திரித்துவக் கல்லூரியில் கில்பேட் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக அதிபராகப் பணிபுரிந்து வரும் நிலையில், புலனாய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவரின் விசா இரத்துச் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அதிபர் கில்பேட் தெரிவிக்கையில்;
"இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் ஆணையாளரால் எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எனது விசா உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்நடவடிக்கை விரும்பத்தகாத சிலரால் மேற்கொள்ளப்பட்டதென்றே நம்புகின்றேன்.
அத்துடன், இது தொடர்பாக எனக்குச் சார்பான நடவடிக்கைகளை பாடசாலையின் ஆளுநர் சபை மேற்கொள்ளு" மெனத் தெரிவித்தார்.
ஆனால், இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க பாடசாலையின் ஆளுநர்சபை மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து நிர்ணயிக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு தான் தயாராகுவதாக அதிபர் கில்பேட் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர் கில்பேட்டின் விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளமையை இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் ஆணையாளர் பி.அபயகோன் உறுதிப்படுத்தியதுடன், புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரமே விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.