மொனராகலையிலிருந்து எகலியகொடை பகுதிக்கு மினிலொறியொன்றில் சூட்சுமமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 123 கிலோ கஞ்சா தூள் இரத்தினபுரிப் பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி ஒருகோடியே 23 இலட்சம் ரூபாவென்று மதிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் சூட்சுமமான முறையில் மினிலொறியொன்றின் கூரையின் மேற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் காய்ந்த கஞ்சாத்தூள் சுமார் 50 பக்கட்டுக்களில் அடைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பக்கட்டும் சுமார் 2 கிலோ தொடக்கம் 3 கிலோ வரை காணப்பட்டது.
தொலைபேசி தகவலொன்றினையடுத்தே மொனராகலையிலிருந்து எகலியகொடைக்கு இரத்தினபுரி வழியாக சென்ற இந்த லொறியை திஹன கட்டைப் பகுதியில் இரத்தினபுரி பொலிஸார் வழிமறித்து இதனைக் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து லொறி சாரதி உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரி நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இரத்தினபுரியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாத்தூள் இது என்பது குறிப்பிடத்தக்கது.