* ஜே.வி.பி. கண்டனம் தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு நீதியும் நியாயமுமாக நடைபெற்றுள்ளதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ள அதேவேளை அரசாங்கமும் பிள்ளையானும் பயங்கர வன்முறைகளை அரங்கேற்றியுள்ளதாக ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில்;
"கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பில் மூவின மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இது மக்கள் ஜனநாயகத்தில் கொண்டுள்ள ஈடுபாட்டை காட்டுகின்றது.
வாக்களிப்பின் போது சில சிறுசிறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனினும் பாரிய மோசடி மற்றும் வன்முறைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுவதை நிராகரிக்கின்றேன் "என்றார்.
ஜே.வி.பி.
இது குறித்து ஜே.வி.பி.யின் முதன்மை வேட்பாளர் விமல் பியதிஸ்ஸ கூறுகையில்;
அம்பாறை குண்டு வெடிப்பு அம்பாறையில் இடம்பெற்ற மோட்டார் தாக்குதல் திருகோணமலையில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை மற்றும் பிள்ளையானும் அரசாங்கமும் இணைந்து அரங்கேற்றிய வன்முறைக்கு மத்தியில் ஜனநாயக ரீதியில் வாக்களிக்குமாறு மக்களை கோருவது கேலிக்கூத்தாக அமைந்துள்ளது.
எவ்வாறெனினும் குச்சவெளி, மூதூர், பெரியகுளம் போன்ற பிரதேசங்களில் பிள்ளையானின் ஆயுதக் குழுவும் அமைச்சர் பதியூதீன் உள்ளிட்ட அரசாங்க அமைச்சர்களின் வன்முறைகளாலும் கிழக்குத் தேர்தல் மோசடி மிக்கதொன்றாக மாறியது.
திருகோணமலையில் உள்ள 84 இராணுவச் சோதனைச் சாவடிகள் நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6 மணி வரை மூடப்பட்டிருந்தது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது.
ஜாஎல நகரசபைத் தலைவர் நேற்று அதிகாலை 1.40 மணியளவில் திருகோணமலைக்கு வருகை தந்துள்ளார். வெளியாட்கள் பிரதேசத்திற்கு வர அனுமதி வழங்கப்பட்ட போதிலும் பிரதேச மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக கந்தளாய் பகுதியைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டிருந்த போது பணி இடை நிறுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.