* ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முறையீடு
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மோசமான வன்முறைகளும், வாக்கு மோசடிகளும் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தியுள்ள ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவை பற்றி தேர்தல் ஆணையாளருக்கும், கிழக்குப் பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கும், தேர்தல் கண்காணிப்புக்குழுக்களுக்கும் முறையிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
ஆளுங்கட்சி வேட்பாளர்களின் குண்டர்களும், அமைச்சர்கள், அவர்களின் ஆதாரவாளர்களும் வாக்களிப்பு நிலையங்களில் வன்செயல்களிலும், வாக்கு மோசடிகளிலும் ஈடுபட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் நேற்று மாலை விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. காத்தான்குடி மில்லத் மகளிர் பாடசாலையில் அமைந்துள்ள 110 ஆம் இலக்க வாக்குசாவடிக்குள் புகுந்த ஹிஸ்புல்லாஹ்வின் குண்டர்கள் அங்கிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் முகவர் நிலாம் என்பவரை தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு வாக்களிக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதோடு வாக்குப் பெட்டிகளுக்குள் பலவந்தமாக வாக்குகள் திணிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறே, காத்தான்குடி அல்-நஸார் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்குள் புகுந்த ஹிஸ்புல்லாஹ்வின் கையாட்கள் யூனுஸ் என்ற ஐ.தே.க.தேர்தல் முகவரை தாக்கிக் காயப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கும் வாக்களிப்பதற்காக வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டு வாக்குப்பெட்டிக்குள் பலவந்தமாக வாக்குகள் திணிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறே காத்தான்குடி பதிரியா வித்தியாலய வாக்குச்சாவடியிலும் வாக்குமோசடி நடைபெற்றுள்ளது.
இவ்வாறான தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்ற போது, பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும், அங்கிருந்த அதிகாரிகளும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
நிலைமை மோசமாவதை அறிந்தவுடன் ஐ.தே.க.வேட்பாளர் முபீன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற போது, குண்டர்களால் தடுக்கப்பட்டு அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் கே.பாயிஸ் உடன் இன்னும் பல வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற அவரது கையாட்கள், பெண்கள் உட்பட வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றவர்களை அடித்து விரட்டியுள்ளதோடு, சாவடிகளுக்குள் உட்புகுந்துள்ளனர். அவர்கள் சாதாரண சிவில் உடையில் ஆயுதம் ஏந்தியவர்களாகக் காணப்பட்டனர். இதனால் பெண் வாக்காளர்கள் உட்பட அநேகர் அச்சத்தினால் அங்கும் இங்கும் சிதறி ஓடியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறைத் தேர்தல் தொகுதியில் அல் அஷ்ராஹ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள 39 ஆம் இலக்க வாக்குச் சாவடிக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வரின் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவு வாகனத்தில் வந்த நபர்கள் வாக்களிப்பதற்காக காத்திருந்தவர்களை துரத்தியடித்து விட்டு வாக்கு மோசடியில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை, ஆகிய பிரதேசங்களில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அடுத்தடுத்து அமைச்சர் அமீர் அலியுடன் சென்ற கும்பல், வாக்கு மோசடிகளில் ஈடுபடுவதற்காக அங்கிருந்த ஐக்கிய தேசிய கட்சி முகவர்களை துரத்தியுள்ளனர். இதுபற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஷபீக் ரஜாப்தீன் எம்.பி.தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் ஹிஜ்ரா வித்தியாலயம், ரஹீமா வித்தியாலயம், ஆண்கள் பாடசாலை, அல்-ஸஹ்ரா வித்தியாலயம், பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம் ஆகியவற்றிலுள்ள வாக்குச் சாவடிகளில் கடமையாற்றிய ஐக்கிய தேசிய கட்சி முகவர்களை அமைச்சர் அதாவுல்லாஹ்வும், அவரது கையாட்டகளும் அடித்துத் துரத்தி விட்டு வாக்கு மோசடிகளில் ஈடுபடுவதற்காக அங்கு உட்பிரவேசித்துள்ளதாக அவ்வூரைச் சேர்ந்த வேட்பாளர் உவைஸ் அறிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக மூதூரில் இலக்க தகடுகள் அற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் படம் ஒட்டப்பட்ட வெள்ளை நிற வான்களும், பிக்கப் வண்டிகளும் அசுரவேகத்தில் புழுதியை கிளப்பிய வண்ணம் அங்குமிங்கும் செல்வதால், மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.
இவையாவும் தேர்தல் தினத்தன்று நண்பகல் வரை நடைபெற்ற தேர்தல் வன்செயல் மற்றும் மோசடிகளில் சிலவாகும். இவ்வாறான அநேக சம்பவங்கள் மூன்று மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் யாவும் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பது திட்டவட்டமாக எடுத்துக் காட்டுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.