கமநெகும திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கென 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தினை இவ்வருடத்தில் முன்னெடுக்கவுள்ளதாக வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.
பதியத்தலாவ பகுதியில் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற, "உணகஸ்கந்த எல்ல" வீடமைப்பு திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;
நாம் வீடற்ற 30 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சிறுதொகை உதவியோடு வீட்டுக்குரியவர்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு 30 வீடுகளைக் கையளித்துள்ளோம். இவ்வகையான வீடமைப்புத் திட்டங்கள் நாட்டின் சகல பிரதேசங்களிலும் நிர்மாணிக்கப்படுகின்றன. அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி குறைந்த அளவாக இருந்தாலும் அந்த நிதியானது மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு உண்மையான தேவை இருந்ததன் காரணமாக இத்திட்டம் வெற்றியளித்துள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாயுள்ளது.
2008 ஆம் வருடத்தில் இத்தகைய 15,000 குடும்பங்களுக்கு கமநெகும திட்டத்தின் மூலம் வீட்டு வசதிகளைச் செய்து கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்காக அரசாங்கத்தினால் 750 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 1000 குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வீட்டு வசதி செய்து கொடுக்கப்படும். இதற்காக 50 மில்லியன் ரூபா செலவிடப்படும். இத்திட்டமானது எவ்வித பாரபட்சமுமின்றி வீட்டுக்கான தேவையுடையவர்களை மாத்திரமே தகுதியாகக் கொண்டு நன்மை பெறுவோர் தெரிவு மேற்கொள்ளப்படுவதால் இது மிகவும் வெற்றிகரமான திட்டமாக அமைந்துள்ளது.
இவ்வைபவத்தின்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மொஹமட் றபீக், செயற்பாட்டுப் பணிப்பாளர், எம்.டீ.எம். சாதிக், பொது முகாமையாளர் வசந்த விஜேரத்ன, வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் யாசின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஜே.என். ஜெயச்சந்திரன் ஆகியோருடன் பிரதேச சபை அங்கத்தவர்கள், பிரதேசவாசிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.