* பவ்ரல் தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபை தேர்தல் வாக்களிப்பின் போது தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களின் பணி சிறப்பாகவிருந்ததாகவும் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததால் மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லையெனவும் `பவ்ரல்' அமைப்பின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் அறிக்கையிடப்பட்ட பாரதூரமான சம்பவங்களுக்கும் பிரதேசம் முழுதும் பரவியிருந்த அச்சம் சூழ்ந்த நிலைக்கும் மத்தியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்தது. மாகாணத்தின் 578 வாக்கெடுப்பு நிலையங்களைத் தழுவியதாக பவ்ரல் இயக்கத்தின் நடமாடும் தேர்தல் கண்காணிப்பாளர்களால் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றவாறு 21 வாக்கெடுப்பு நிலையங்களில் எதிரணி அரசியல் கட்சிகளுக்குச் சொந்தமான வாக்கெடுப்பு நிலைய முகவர்களுக்கு வாக்கெடுப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு வாய்ப்பளிக்கப்படாமை போன்றே, 5 வாக்கெடுப்பு நிலையங்களில் அங்கிருந்த வாக்கெடுப்பு நிலைய முகவர்களை விரட்டியடித்தமை, தாக்கியமை போன்ற 14 சந்தர்ப்பங்களும், வாக்கைப் பிரயோகிக்காதிருப்பதற்கு வாக்காளர்களை அச்சுறுத்தி பயமுறுத்திய 24 சந்தர்ப்பங்களும் அறிக்கையிடப்பட்டன. வாக்கெடுப்பு நிலையங்களிடையே பெரும்பாலானவற்றில் ஒப்பீட்டளவில் அமைதியான ஒரு சூழ்நிலை காணப்பட்டது என்பதுடன், சம்பவங்களின்றிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் தமணை பிரதேசத்தின் மீது மோட்டார் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தேர்தல் தினத்தன்று மக்கள் பீதியடைய நேரிட்டது. அதற்கு முன்னைய தினம், அம்பாறை நகரில் உணவுச்சாலையொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலினால் குறைந்தபட்சம் 12 பொதுமக்கள் மரணித்தனர். 20 பேர் காயமுற்றனர். அவ்வாறே, திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அது மூழ்கியது. தேர்தல் தினத்தன்று வன்செயல்களையும் தேர்தல் மோசடிகளையும் மேற்கொள்ள எதிர்பார்க்கும் ஆதிக்க சக்திகள் இருந்திருக்குமாயின், பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் பாரிய எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை அவற்றை முறியடிப்பதற்குக் காரணமாக அமைந்தது. தேர்தல் திணைக்களத்தின் தேர்தல் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை குறைவின்றி ஆற்றியதாக பவ்ரல் கண்காணிப்பாளர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன்னைய பயமுறுத்தல்கள்
தேர்தலொன்றின் ஒப்பீட்டு நியாயத்தை குறித்த தேர்தல் தினத்தன்று இடம்பெறுவனவற்றின் மீது மாத்திரம் முடிவுசெய்யப்பட முடியாதிருப்பதற்குக் காரணம், ஜனநாயக செயன்முறைக்காக வெற்றிகரமாக பங்களிப்பை நல்குவதற்கு பிரஜைகளினதும் அரசியல் கட்சிகளினதும் இயலுமையின் மீது தாக்கஞ் செலுத்தும் மற்றும் பல காரணிகளும் இருப்பதாகும். தேர்தல் பிரசாரக் காலத்தில் குறைந்த வன்செயல்கள் இடம்பெற்ற போதிலும், முழுத் தேர்தல் காலத்திலும் பயமுறுத்தும் ஒரு போக்கு நிலவியதாக பவ்ரல் இயக்கம் வலியுறுத்துகின்றது. அதன் பிரதிபலனாக, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு உதவியாக அமையாத ஒரு சூழலுக்கு மத்தியிலேயே தேர்தல் பிரசார இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
சில காலத்துக்கு முன்னர் ஆயுதக் குழுவொன்றாகவிருந்து இன்றளவில் தற்பாதுகாப்புக்காக ஆயுதந் தரித்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தேர்தலில் காணப்பட்ட ஒரு விமர்சனத்துக்குரிய ஒரு விடயமாக அமைந்தது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கான அடிப்படை தேவைப்பாடாக இருப்பது அதில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் ஆயுதங்களைக் களைந்திருப்பதாகும்.
கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் எதிரணி அரசியல் கட்சிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களிலிருந்து புலப்பட்டவாறு, எதிரணி அரசியல் கட்சிகளின் தேர்தல் இயக்கத்துக்கு தடங்கலை ஏற்படுத்திய பயமுறுத்தும் செயற்பாடு பெருமளவுக்குக் காணப்பட்டது.
இந்தத் தேர்தலை, சுதந்திரமானதும் நீதியானதுமான ஒரு தேர்தலின் மட்டத்திலிருந்து தள்ளிவிட்ட மற்றுமொரு காரணி யாதெனில், அரசாங்கத்தின் தேர்தல் இயக்கத்திற்காக அரசாங்க சொத்துக்கள் பாரதூரமான விதத்தில் முறைகேடாகக் கையாளப்பட்டமையாகும். அரச வாகனங்களும் அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களுக்குச் சொந்தமான பாடசாலைகள், தங்குமிடங்கள் போன்ற கட்டிடங்களும் தேர்தல் இயக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதை பவ்ரல் இயக்கம் அவதானித்தது. அரசாங்கத்தின் கருத்துகளை மாத்திரம் பரப்பீடு செய்வதற்காக வானொலி நிலையமொன்றும், தொலைக்காட்சி நிலையமொன்றும் கிழக்கு மாகாணத்தில் கையாளப்பட்டது. தேர்தல் காலப்பிரிவில் பொருளாதார அபிவிருத்திக் கருத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டமையும் அரசாங்கத்திற்கு முறைகேடான விதத்தில் அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தேர்தல்களில் அரசாங்கத்தினால் இத்தகைய முறைகேடான கையாளல்கள் முன்னெடுக்கப்படுவது நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளபோதிலும் அவற்றை அங்கீகரிக்க முடியாதிருப்பதுடன், மக்களின் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டரீதியான செயன்முறையொன்றை மேற்கொள்வது அவசியமாகும்.