* வெள்ளவத்தை, தெஹிவளையைச் சேர்ந்த 3 பேர் கைது
ஒரே இலக்கத்துடன் கடந்த 3 வருடகாலமாக நாட்டில் ஓடிய இரு வாகனங்களை காவத்தை மற்றும் இரத்தினபுரி விஷேட பொலிஸாரும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றியதுடன் இது சம்பந்தமாக 3 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
முதலாவது வாகனமான வானின் உரிமையாளரான காவத்தை எந்தான தோட்டத்தை சேர்ந்தவரும் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் தனிப்பட்ட செயலாளருமான ஜயசேன பெரேரா, காவத்தை பொலிஸில் செய்த முறைப்பாடொன்றை அடுத்த இந்த இரு வான்களும் கைப்பற்றப்பட்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு வெள்ளவத்தை, தெகிவளை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
ஜயசேன பெரேரா தனது வானை பிணையாக வைத்து குறிப்பிட்ட தொகைப் பணத்தை காவத்தையிலுள்ள பிரபல அரச வங்கியொன்றில் கடனாகப் பெற்று அதனை திரும்பிச் செலுத்திய பின்னர் வானின் உரிமையை மீண்டும் தன்வசப்படுத்தும் வகையில் கொழும்பு மோட்டார்த் திணைக்களத்துடன் தொடர்புகொண்டபோதே குறிப்பிட்ட அவரது வானின் கோவைகள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இந்த மோசடி கண்டு பிடிக்கப்பட்டு வான்களும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெல்மதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 15 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மற்றவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட வான்கள் இரண்டும் இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்தும் வகையில் நீதிபதியின் உத்தரவுக்கமைய கொழும்புக்கு இன்று திங்கட்கிழமை கொண்டு செல்லப்படுகின்றன.
இது குறித்து இரத்தினபுரி விஷேட பொலிஸ் பிரிவின் அதிகாரி சந்திரசேகர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.