* பிரதிக்கல்வி அமைச்சர் சச்சி தெரிவிப்பு
இன்று இலவசக் கல்வியை பாதுகாக்கும் முகமாகவும் இன்றைய யுகத்தில் நவீன சவாலுக்கு முகம் கொடுக்கும் வகையிலும் மாணவர்களை தயார்படுத்துவதன் அவசியம் மற்றும் பாடநூல்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுடன், அவற்றை உரிய நேரத்தில் அனுப்பும் கடப்பாடு எமக்குரியது. எனவே இதுவிடயத்தில் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதிக் கல்வி அமைச்சர் மு.சச்சிதானந்தன் தெரிவித்தார்.
அண்மையில் கல்வி வெளியீட்டுத்திணைக்கள பாடநூல் விநியோகம் தொடர்பாக கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது; தமிழ்மொழி மூல பாடசாலைகளில் பாடநூல்களுக்கு பற்றாக்குறை இருப்பதை நான் அறிகிறேன். மேலும், தரமான கல்வியை பெறுவதற்கு பாடநூல்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளது அவசியத்தை உணர்த்தி இத்துறையில் அபிவிருத்தியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பையும் வழங்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்ததாவது;
இதுவரை குறிப்பிடத்தக்களவு பாடநூல்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்துள்ள அதேவேளை, இது தொடர்பில் ஏதும் குறைகள் இருப்பின் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளரிடம் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசியக்கல்வி நிறுவக உதவிப் பணிப்பாளர் நாயகம் பண்டார, கலாநிதி, யு. நவரட்ணம், கலாநிதி கமலநாதன், பேராசிரியர் சபா ஜெயராசா மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகள் பிரிவு பணிப்பாளர் எம். சபாரஞ்சன், கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளர் லெனின் மதிவானம், தமிழ்மொழிப்பிரிவு பணிப்பாளர் வி.எஸ். இதயராஜா, எஸ். காண்டீபன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.